காங்கிரஸ் இல்லாமல் மூன்றாவது அணி அமைக்கப்பட்டால் தோல்வியில் தான் முடியும்: கார்த்தி சிதம்பரம்

2024ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ் கட்சி இல்லாமல் கூட்டணி அமைக்கப்பட்டால், அது தோல்வியில் தான் முடியும் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ராகுல் காந்தி நடைபயணம் தொடங்கப்பட்ட நாள் முதல் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். இதையடுத்து நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்க ஆயத்தமாகி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால், வரும் நாட்களில் மக்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு ஏறுமுகம் என்றே கணிக்கப்பட்டுள்ளது. இதனால் தேசிய அளவிலும், மாநில அளவிலும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் தீவிரமாக மக்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சேவனிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய கட்டிடம் திறப்பு மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆ.ராசா பேச்சு குறித்து கேள்விக்கு பதில் கூறுகையில், தமிழகத்தில் தேவையில்லாத விஷயங்களை எல்லாம் சர்ச்சையாக்கி வருகின்றனர். ஆக்கபூர்வமான விஷயங்களை பேசாமல், உணர்வு, உணர்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களை தமிழக அரசியலில் பேசுவது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார்.

இதனைத்தொடர்ந்து மின் கட்டண உயர்வு குறித்த கேள்விக்கு, தமிழக மின் துறையில் ஏற்பட்டுள்ள ரூ.1.28 லட்சம் கோடி கடன் சுமையை குறைக்காத வரையில், மின் பிரச்சனைகள் தீராது. தமிழகத்தில் உள்ள மின் உற்பத்தி நிலையங்கள் 30 சதவிகிதம் தகுதியற்ற நிலையில் உள்ளது. அவைகளை மூட வேண்டும். அதற்கு மாற்று மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க வேண்டும். மின் உற்பத்திக்கான பழைய ஒப்பந்தங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

அதேபோல் நீதிமன்றத்தை விமர்சித்த சர்ச்சையில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கருக்கு வழங்கப்பட்டுள்ள சிறை தண்டனை அதிகமானது. அதேபோல் அவரின் தண்டனை விதிக்கப்பட்டது தேவையற்றது. இதனை நீதிமன்றம் தவிர்த்து இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்விக்கு, காங்கிரஸ் கட்சி அதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. வரும் நாட்களில் தேர்தல் பணிகள் இன்னும் தீவிரப்படுத்தப்படும். தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி மிகமுக்கிய பங்கு வகிக்கும். காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது கூட்டணி அமைக்கப்பட்டால், அது தோல்வியில் தான் முடியும் என்று தெரிவித்தார்.