கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்குமாறு எச்சரிக்கை!

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனமுடனும் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கனடாவில் உள்ள பிராம்ப்டன் என்ற நகரில் சீக்கிய பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் அமைப்பு தனி காலிஸ்தான் நாடு என்ற தீர்மானத்தைக் கொண்டு வந்து வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பு உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் அரிந்தாம் பக்சி கண்டம் தெரிவித்திருந்தார்.

1980, 90 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோஷத்தை எழுப்பி பிரிவினைவாத வன்முறை செயல்களில் ஈடுபட்டுவந்ததுதான் இந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு. அவை தற்போது கனடாவில் பிரிவினைவாத வன்முறை செயல்கள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, கனடாவில் இருக்கும் இந்தியர்கள், மாணவர்கள், சுற்றுலா சென்றுள்ளவர்கள், கல்விக்காக கனடாவுக்குச் செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும் இருக்குமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், கனடாவில் வசிக்கும் இந்தியர்கள், மாணவர்கள் அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தில் தங்கள் விவரங்களை அந்தந்த இணையதளங்கள் அல்லது போர்ட்டல் madad.gov.in மூலம் பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், இதன் மூலம் ஏதேனும் தேவை அல்லது அவசரநிலை ஏற்பட்டால், கனடாவில் உள்ள இந்திய மக்களுக்கு இந்தியத் தூதரகம் உடனடியாக தொடர்பு கொண்டு ஒருங்கிணைக்கவும், உதவிகள் வழங்கவும் உதவியாக இருக்கும் என தெரிவித்துள்ளது.

கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான நடவடிக்கையை இந்திய தூதரகமும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசை இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இருப்பினும், இந்த விவகாரத்தில் நீதி வழங்கு செயலில் கனடா அரசு இதுவரை தீவிரம் காட்டப்படவில்லை என வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.