உச்சநீதிமன்றத்தில் ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனு திங்கள்கிழமை விசாரணை!

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தங்களை விடுதலை செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் மீது வரும் திங்கள்கிழமை விசாரணை நடைபெற உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ம் ஆண்டு சென்னை பூவிருந்தவல்லி தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இத்தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதில் சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை உறுதியானது. பின்னர் 2000-ம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் 2014-ம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதனையடுத்து ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மொத்தம் 7 பேர் ஆயுள் தண்டனை அனுபவித்தனர். இந்த 7 தமிழரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தமிழகத்தின் நீண்டகால கோரிக்கை. இது தொடர்பாக சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தம்மை விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ல் பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த மார்ச் மாதம் பேரறிவாளனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. இதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் உச்சநீதிமன்றம் மே 18-ந் தேதி மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியது. அரசியல் சாசனத்தின் 142-வது பிரிவின் கீழ் உச்சநீதிமன்றம் தமக்கான சிறப்பு அதிகாரத்தின் கீழ் இத்தீர்ப்பை வழங்கியது. அத்தீர்ப்பில், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன் 31 ஆண்டுகாலம் சிறை தண்டனை அனுபவித்துவிட்டார். அவரது சிறை தண்டனை, நன்னடத்தை, ஜாமீன் காலம் உள்ளிட்டவைகளை ஆராய்ந்து ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் சிறையில் இருந்து பேரறிவாளனை விடுதலை செய்வதாக தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்றம் அரிதிலும் அரிதாக 142-வது பிரிவை பயன்படுத்தி இத்தீர்ப்பை வழங்கியது.

இத்தீர்ப்பின் அடிப்படையில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அம்சங்களை அம்மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர். மேலும் இடைக்காலமாக பேரறிவாளனுக்கு வழங்கியதைப் போல தங்களையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரியிருந்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை நடைபெற உள்ளது.