மதுரை எய்ம்ஸ் உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும்: மக்கள் நீதி மையம்!

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து உண்மையை விளக்க மத்திய அரசு முன் வருமா என மக்கள் நீதி மையம் கேள்வி எழுப்பி உள்ளது.

சமீபத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா தமிழகம் வந்த போது, ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 95% நிறைவடைந்துள்ளது’ என்று பேசியுள்ளார். இது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனை விமர்சித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். இணையதளங்களிலும் நட்டாவின் இந்த பேச்சு பெரும் விவாதத்திற்கு உள்ளானது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட உள்ள இடத்திற்கு சென்று மருத்துவமனையை காணவில்லை என்பன போன்ற பதாகையை ஏந்தி அதை சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்தனர்.

இதனை அடுத்து மதுரை எய்ம்ஸ் மருதுவமனை விவகாரம் தொடர்பாக மக்கள் நீதி மையம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

2019-ல் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி. மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், சாலை, சுற்றுச்சுவரைத் தவிர வேறெந்த கட்டுமானப் பணிகளும் தொடங்கவில்லை. பூர்வாங்கத் திட்டமிடல் பணிகள் இறுதிநிலையை எட்டியுள்ளதாகவும், நிதி ஒதுக்கீடு முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த விவகாரத்தில், தமிழக மக்களுக்கு உண்மை நிலையை விளக்க மத்திய அரசு முன்வர வேண்டும். எந்தெந்தப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன, எந்தெந்த பணிகள் நிலுவையில் உள்ளன என்பது குறித்தான தகவலை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

பாஜகவின் சாதனையாகக் கூறிக்கொள்ளும் எய்ம்ஸ் பெயரில் புனைவுகள்தான் உலவுகின்றன. எனவே, திட்டத்தின் உண்மை நிலை குறித்து வெளிப்படையாக விளக்கி விட்டு, உரிய நிதி ஒதுக்கீடு பெற்றுத்தந்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து, மருத்துவமனையைப் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று மநீம வலியுறுத்துகிறது. இவ்வாறு மக்கள் நீதி மையம் தெரிவித்துள்ளது.

மேலும் மக்கள் நீதி மையம் மற்றொரு டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

ஊதிய உயர்வு சரியாக வழங்கப்படவில்லை என்றும், புதிய வருகைப் பதிவேடு முறை தங்களை அலைக்கழிப்பதாகவும், மாநகராட்சி அலுவலர்கள் நவீன தீண்டாமையை கடைப்பிடிப்பதாகவும் கூறி 700க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நெல்லை மாநகராட்சி அலுவலகம் முன்பு இன்று (நேற்று) போராட்டம் நடத்தியுள்ளனர். சுகாதாரம் காக்கும் தூய்மைப் பணியாளர்களின் உரிமைகளைக் காப்பதும், நியாயமான ஊதியம் கொடுப்பதும் அரசின் அடிப்படைக் கடமையாகும். நெல்லையில் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு தமிழக அரசானது தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.