இத்தாலி முதல் பெண் பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி வெற்றி!

இத்தாலியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜியோர்ஜியா மெலோனி வெற்றி பெற்று அந்நாட்டின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இத்தாலி நாட்டில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் கடந்த ஆண்டு அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமனம் செய்யப்பட்டார். எனினும், பொருளாதார நிலை மோசமடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து, கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில், மரியோ டிராகி திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகினார். இது தொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தையும் அவர் அதிபருக்கு அனுப்பி வைத்தார்.

இதைத் தொடர்ந்து அங்கு பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இத்தாலி நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 60 ஆயிரம் வாக்குச்சாவடிகளில் மக்கள் ஆர்வமுடன் தங்களது வாக்குகளை செலுத்தினர். இரவு 11 மணி வரை வாக்குப்பதிவு நீடித்தது. இதனை தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணும் பணிகள் தொடங்கின.

இதுவரை எண்ணப்பட்ட 63 சதவீத வாக்குகளில் ஜியோர்ஜியா மெலோனியின், பிரதர்ஸ் ஆப் இத்தாலி கட்சியானது 26 சதவீதம் அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது. அவரது கூட்டணி கட்சிகளான, மேத்யூ சால்வினி தலைமையிலான லீக் கட்சி, 9 சதவீதமும் மற்றும் சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையிலான போர்ஜா இத்தாலியா கட்சி, 8 சதவீதமும் வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம் இத்தாலி நாட்டின் அடுத்த பிரதமராக ஜியோர்ஜியா மெலோனி பதவி ஏற்க உள்ளார். மேலும் அவர் இத்தாலி நாட்டின் முதல் பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

வெற்றி குறித்து ஜியோர்ஜியா மெலோனி கூறுகையில், ‘இத்தாலியர்கள் எங்களை தேர்ந்தெடுத்து உள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைக்க மாட்டோம். ஒருபோதும் நாங்கள் அப்படி செய்ததும் இல்லை’ என தெரிவித்து உள்ளார்.