தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழக பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 50க்கும் மேற்பட்ட இடங்களில் அக்.2ல் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கும்படி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார். இதனைத்தொடர்ந்து விசிக தலைவர் திருமாவளவன் சார்பில், காவல் ஆணையர் அலுவலகத்தில், அக்.2ல் சமூக நல்லிணக்க மனித சங்கிலி போராட்டம் நடத்த காவல்துறையிடம் மனு அளித்திருந்தார். இதற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள், நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளும் பங்கெடுக்கப் போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-
இது துரதிஷ்டவசமான ஒன்று. 100 ஆண்டுகளாக ஆர்எஸ்எஸ் பல்வேறு சவால்களை சந்தித்துள்ளது. இதேபோன்று ஆர்எஸ்எஸ் ஊர்வலங்கள் நாட்டின் பல பகுதிகளில் நடைபெற்றுள்ளது. எங்கும் எந்த அசம்பாவிதங்களும் நடந்ததில்லை. இந்த ஊர்வலம் நடந்தால் பிரச்சினை ஏற்படும் என்ற போலியான காரணத்தை காட்டி, இதனை தடை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் வழக்குகள் நடைபெற்றது. தற்போது ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு போலீசாரின் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்ள முடியாதது. ஆர்எஸ்எஸ் இயக்கம் இதுவரை கலவரங்களை தூண்டியதோ, ஈடுபட்டதோ கிடையாது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது முறையானது. நீதி கிடைக்கும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து விசிக ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, ஒரு இயக்கத்திற்கு எதிரான சிந்தனையோடு ஊர்வலம் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்களின் லட்சியங்கள், கோட்பாடுகளுக்காக ஊர்வலம் நடத்தினால் எந்த தடையும் இல்லை. ஆனால் விசிக ஊர்வலத்தின் நோக்கம் என்ன என்பது பற்றி தெரியவில்லை. அதனால் கருத்து கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.