தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாமல் திமுக அரசு திணறுகிறதா என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஆா்எஸ்எஸ் ஊா்வலம், தமிழகத்திலும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில், அரசு அனுமதியுடன் நடைபெறுவது வழக்கம். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு முக்கியமான அணிவகுப்பு ஊா்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு ஊா்வலம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அக்டோபா் 2-இல் ஆா்எஸ்எஸ் திட்டமிட்டுள்ள ஊா்வலம் நடத்த தமிழகத்தின் அனைத்து மாவட்டத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஊா்வலம் நடத்த அனுமதி மறுத்து ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு காவல்துறை எழுதிய கடிதத்தில் பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை மத்திய அரசு தடை செய்துள்ளதால், பல இடங்களில் போராட்டம் நடத்தி வரும் சூழலில் தமிழகத்தில், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது. இந்தக் கடிதத்தில் உள்ள தகவல் உண்மையெனில், பாப்புலா் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினா், வன்முறை நடத்தும் அளவுக்கு தமிழகத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறாா்களா? அப்படியென்றால் காவல்துறை, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டு இருப்பதை ஒத்துக் கொள்கிறதா? அல்லது, சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்த தமிழக அரசு திணறுகிா?
புதுச்சேரியில், காரைக்காலில், ஆா்எஸ்எஸ் ஊா்வலம் தடை ஏதுமின்றி நடைபெறுகிறது. எனவே, ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு ஊா்வலம் நடத்த காவல் துறையின், முறையான அனுமதி வழங்க, தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளாா்.