தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் நடந்த விபத்து குறித்து விசாரணை இன்று தொடங்கியது.
தஞ்சாவூர் களிமேடு தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் பலியாகினர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். காயமடைந்தவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் நிதி உதவியையும் முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிலையில் களிமேடு விபத்து குறித்து விசாரிக்க தமிழ்நாடு அரசு ஒருநபர் ஆணையம் அமைத்தது. இந்த ஆணையத்தின் வருவாய்த்துறை செயலாளர் குமார் ஜெயந்த், இன்று விபத்து நடந்த களிமேடு பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர், விபத்து குறித்து நாளை தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெறும் என்றார். பொதுமக்கள் நேரில் வந்து விசாரணையில் பங்கேற்கலாம் என்றும் தெரிவித்தார்.