பதிவுத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு: அமைச்சர் மூர்த்தி

பதிவுத்துறையில் ரூ.20 ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட இலக்கு என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்.

மதுரை ஒத்தக்கடையில் உள்ள ஒருங்கிணைந்த பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் சனிக்கிழமை தோறும் பத்திரப்பதிவு செய்யும் திட்டத்தினை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:

இந்த திட்டமானது தமிழகத்திலுள்ள 100 சார்பு பதிவு அலுவலகத்தில் முதற்கட்டமாக இன்று முதல் தொடங்கப்படுகிறது. விரைவில் அனைத்து பத்திர பதிவு அலுவலர்களிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். தமிழகத்தில் 87 சதவீதம் வருவாய் வணிக வரி மற்றும் பதிவுத்துறை மூலமாக கிடைக்கிறது. அரசு அலுவலகங்கள், தனியார் ஊழியர்களுக்கு ஏதுவாக சனிக்கிழமை தோறும் பத்திரப்பதிவு பதிவு செய்யும் முறை மக்களிடம் குறைகளை கேட்டு தற்போது நடைமுறைப்படுத்தி வருகிறோம்.

கடந்த ஆண்டைவிட தற்போது போலி பத்திர பதிவு குறைந்துள்ளது. பத்திரப் பதிவுத்துறையில் உள்ள குறைகளை களைய சட்ட முன்வடிவு தற்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு உள்ளது. அது ஒப்புதல் கையெழுத்து ஆனவுடன் இந்த சட்டம் நடைமுறைப்படுத்தும்போது போலி பத்திரப்பதிவு என்பதே இருக்காது. இந்தத் திட்டம் இந்தியாவிற்கே ஒரு வழிகாட்டி திட்டமாகவும் இருக்கும். தவறு செய்தவர்கள் சிறை தண்டனை அடைவார்கள்.

கடந்த ஒரு ஆண்டு காலத்தில் 4 மாதங்கள் கொரோனா, 2 மாத காலம் உள்ளாட்சித் தேர்தல், ஒரு மாத காலம் மழை வெள்ளம் என உள்ள சூழ்நிலையிலும் பதிவுத்துறையில் ரூ. 13 ஆயிரத்து 260 கோடி வருவாய் ஈட்டி உள்ளோம். ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வேண்டும் என்பதே இலக்காகும். இவ்வாறு அவர் பேசினார்.