அமெரிக்க அதிபர் மாளிகையில் பிரமாண்ட தீபாவளி கொண்டாட்டம்!

அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத அளவுக்கு, பிரமாண்ட தீபாவளி கொண்டாட்டம் மற்றும் விருந்துக்கு, அதிபர் ஜோ பைடன் நேற்று ஏற்பாடு செய்திருந்தார்.

அமெரிக்காவில் கடந்த சில நாட்களாகவே தீபாவளி கொண்டாட்டம் களைகட்டி வருகிறது. முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், தனக்கு நெருக்கமான இந்திய வம்சாவளி தொழில் அதிபர்களுக்கு, அவரது இல்லத்தில் தீபாவளி விருந்துக்கு சமீபத்தில் ஏற்பாடு செய்திருந்தார். துணை அதிபரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரீஸ், சமீபத்தில் தன் வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் சார்பில், வெள்ளை மாளிகையில் நேற்று பிரமாண்டமான தீபாவளி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வெள்ளை மாளிகையில் இதுவரை நடந்த தீபாவளி கொண்டாட்டத்தை மிஞ்சும் வகையில், இந்த கொண்டாட்டம் பிரமாண்டமாக நடந்தது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். அனைவருமே இந்திய கலாசார உடையணிந்து வந்திருந்தனர்.

இந்திய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் நடந்தன. வெள்ளை மாளிகையில் உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த, ‘ஈஸ்ட் ரூம்’ எனும் பிரமாண்ட அறையில் தான், இந்த கொண்டாட்டம் நடந்தது.
இந்தியா – அமெரிக்கா இடையேயான அணு சக்தி ஒப்பந்தம் உள்ளிட்ட, இரு நாடுகளுக்கு இடையேயான பல முக்கிய நிகழ்வுகள் இந்த அறையில் தான் நடந்தன. இதை நினைவூட்டும் வகையில் இங்கு தீபாவளி கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துணை அதிபர் கமலா ஹாரீசும் இதில் பங்கேற்றார்.

விருந்தினர்களை வரவேற்று அதிபர் பைடன் பேசியதாவது:-

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகின்றனர். கொரோனா பெருந்தொற்று காலத்தில் அவர்களது பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. குழந்தைகளுக்கு கற்பித்தல், பெரியவர்களை பராமரித்தல், உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை பாதுகாத்தல் ஆகியவற்றில் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள், அமெரிக்காவுக்கு மிகவும் உதவியாக இருந்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில் இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக எலிசபெத் ஜோன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக தற்போது பாட்ரிசியா ஏ லசினா பதவி வகிக்கிறார். இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கர்களை இடம்பெயரச் செய்யும் பணிக்கான ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எலிசபெத் ஜோன்ஸ்(74), இந்தியாவுக்கான அமெரிக்க துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் அலுவலகம் பிறப்பித்துள்ளது.

எலிசபெத் விரைவில் புதுடெல்லியில் உள்ள அமெரிக்க துாதரகத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்பார் எனவும், வெள்ளை மாளிகை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.