அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும்: குஷ்பு

திமுக பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பேச்சாளர் சைதை சாதிக், பெண்களை அவதூறாக பேசியதை கைதட்டி ரசித்த அமைச்சர் மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுக பொதுக் கூட்டத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பேச்சாளர் சைதை சாதிக் பேசுகையில், பாஜகவில் அங்கம் வகிக்கும் குஷ்பு, நமீதா, காயத்ரி ரகுராம், கவுதமி ஆகியோரை மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். அவர்களுடைய கண்ணியத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் பெண்மையை அவமானப்படுத்தும் வகையிலும் அவர் சொன்ன கருத்து அடங்கிய வீடியோ பொது வெளியில் வைரலானது. அமைச்சர் மனோ தங்கராஜை வைத்துக் கொண்டே சைதை சாதிக் ஆபாசமான , தரங்கெட்ட கருத்துகளை தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எல்லாவற்றுக்கு மேலாக சைதை சாதிக்கின் தரக்குறைவான வார்த்தைகளை அமைச்சர் மனோ கண்டிக்கவில்லை என்பதுதான் பேரதிர்ச்சியாக இருந்தது. இந்த சம்பவத்திற்கு கனிமொழி வருத்தம் கேட்டுள்ளார்.

இந்த நிலையில் நடிகை குஷ்புவுக்கு போன் செய்த சைதை சாதிக் அவரிடம் மன்னிப்பும் கேட்டார் என திமுக தரப்பில் சொல்லப்படுகிறது. இதுகுறித்து குஷ்பு இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து நடிகை குஷ்பு கூறுகையில், சைதை சாதிக் விஷயத்தில் திமுக தலைமை என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கும் என்பதற்காக காத்திருந்தேன். ஆனால் சைதை சாதிக் மீது முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. சரி சைதை சாதிக்கின் தரம் அப்படிதான் என்றாலும் அவரது பேச்சை கைதட்டி ரசித்த அமைச்சர் மனோ தங்கராஜ் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவிக்கவே இல்லை. தரக்குறைவான பேச்சுக்காக சாதிக்கைவிட அமைச்சர் மனோவே குற்றம் இழைத்தவர். எனவே அமைச்சர் மன்னிப்பு கேட்கும் வரை நானோ பாஜகவோ இந்த பிரச்சினையை எளிதில் விடாது. சாதிக் என்னிடம் போனில் பேசி மன்னிப்பு கேட்டதாக திமுகவினர்தான் சொல்கிறார்கள். ஆனால் இதுவரை யாரும் என்னிடம் பேசவில்லை. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. கனிமொவி வருத்தம் தெரிவித்துவிட்டார். ஆனால் அது போதாது. சைதை சாதிக் குறித்து டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்திற்கு வரும் 4ஆம் தேதி நேரில் சென்று புகார் அளிக்கவுள்ளேன். எனக்கு நியாயம் கிடைக்கும் வரை ஓயமாட்டேன் என குஷ்பு தெரிவித்துள்ளார்.