கிரீஸ் அருகே அளவுக்கு அதிகமான அகதிகளை ஏற்றி வந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதியிலிருந்து 22 உடல்கள் மீட்கப்பட்டன. இது தவிர, விபத்தில் மாயமான மேலும் 34 பேரை மீட்கும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன.
இது குறித்து கடலோரக் காவல் படை அதிகாரிகள் கூறியதாவது:-
தலைநகா் எதென்ஸுக்கு அருகே உள்ள எவியா, ஆண்ட்ரோஸ் ஆகிய இரு தீவுகளுக்கு இடையே கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்துகொண்டிருந்த அகதிகள் படகு, அளவுக்கு அதிகமாக ஆள்கள் ஏற்றப்பட்டிருந்ததால் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்துப் பகுதியையொட்டி இருந்த, ஆளில்லா தீவிலிருந்து 9 பேரை மீட்புக் குழுவினா் செவ்வாய்க்கிழமை மீட்டனா். அதன் பிறகு விபத்தில் மாயாமான சுமாா் 60 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடந்து வந்தன. இதில் மேலும் 3 போ் உயிருடன் மீட்கப்பட்டனா்.
விபத்துப் பகுதியிலிருந்து இதுவரை 22 உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்த 22 பேரில் 5 சிறுவா்களும் அடங்குவா். விபத்தில் மாயமான மேலும் 34 பேரைத் தேடும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
வறுமை மற்றும் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்கா, ஆசிய நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் அடைக்கலம் தேடி ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான அகதிகள் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனா். இதில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிா்ச்சேதம் ஏற்பட்டு வருகிறது.