கர்நாடகாவில், பிரசவ வலியில் துடித்த தமிழகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்ணுக்கு அரசு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால், வீட்டிற்கு திரும்பி, இரட்டை குழந்தைகளை பெற்ற அவர், ரத்தப் போக்கால் பரிதாபமாக உயிரிழந்தார்; இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தன.
கர்நாடகாவின் துமகூரு பகுதியில் வசித்தவர் கஸ்துாரி, (30). தமிழகத்தைச் சேர்ந்த இவர், கூலி வேலை செய்து, குடும்பத்துடன் இங்குள்ள குடிசைப் பகுதியில் வசித்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவருக்கு, நேற்று முன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், இவரை ஆட்டோவில் ஏற்றி, மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு பணியில் இருந்த டாக்டர், ஆதார் கார்டு மற்றும் பிரசவத்துக்கு பதிவு செய்ததற்கான கார்டு ஆகியவை இல்லை எனக் கூறி, அந்த பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்க மறுத்தார். இதனால் கஸ்துாரி மீண்டும் வீட்டுக்கு திரும்பினார். சிறிது நேரத்தில் வலி அதிகமானது. ஒரு குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு குழந்தை பிறந்தது.
இதற்கிடையே அதிக ரத்தப் போக்கு காரணமாக கஸ்துாரி பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் குழந்தைகளும் இறந்தன. இந்த விவகாரம் சர்ச்சையானதை அடுத்து, கஸ்துாரிக்கு மருத்துவமனையில் அனுமதி மறுத்த டாக்டரை ‘சஸ்பெண்ட்’ செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.