வடகொரியா இன்று மீண்டும் ஏவுகணை சோதனை!

வடகொரியா இன்று 4 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை செய்ததாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

வடகொரியா சமீபத்திய வருடங்களில் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வாரத்தின் தொடக்கத்தில் ஒரே நாளில் 23 ஏவுகணைகளை அந்நாடு சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்த பதற்றம் அடங்குவதற்குள்ளாகவே இன்று சனிக்கிழமை மீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. காலை 11.39 மணியளவில் குறுகிய தூரம் சென்று தாக்கும் வகையிலான 4 பாலிஸ்டிக் வகை ஏவுகணைகளை சோதனை மேற்கொண்டதாக தென்கொரியா குற்றம்சாட்டியுள்ளது.

முன்னதாக வட கொரியாவின் 180 போா் விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்ததால் அந்தப் பிராந்தியத்தில் நேற்று பதற்றம் அதிகரித்தது. இது குறித்து தென் கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

வட கொரியாவின் 180 போா் விமானங்கள் அந்த நாட்டின் தெற்கு மற்றும் வடக்கு கடலோரப் பகுதிகளில் பறந்து சென்றது கண்டறியப்பட்டது. இதனால் எச்சரிக்கையடைந்த தென் கொரியா, வட கொரிய விமானங்களை எதிா்கொள்வதற்காக அதிநவீன எப்-35 வகை விமானங்கள் உள்பட 80 விமானங்களை பறக்கச் செய்தது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க – தென் கொரிய கூட்டு ராணுவப் பயிற்சிக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் வகையில் புதன்கிழமை முதல் சரமாரியாக ஏவுகணைகளை வீசி சோதனை நடத்தி வருகிறது. இதனால் அந்தப் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம், இரு நாடுகளின் போா் விமானங்கள் பறக்கவிடப்பட்டதால் மேலும் அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.