மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்தது. பொன்னியின் செல்வன் வெற்றி விழாவை லைகா நிறுவனம் படக்குழுவினருடன் சிறப்பாக கொண்டாடியது. இதில், இயக்குநர் மணிரத்னம், விக்ரம் ஆகியோர் கலந்துகொண்டு பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் குறித்து பேசினர்.
செப்டம்பர் 30ம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் 500 கோடிக்கும் மேல் வசூலித்து பிரம்மாண்டமான சாதனையை படைத்தது. மணிரத்னம் இயக்கிய இந்தப் படத்தில் ஆதித்த கரிகாலன் கேரக்டரில் விக்ரம் நடித்திருந்தார். விக்ரமின் கனவுப் பாத்திரமான ஆதித்த கரிகாலன், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. ஆதித்த கரிகாலன் கேரக்டருக்கு அளவெடுத்து செய்தது போன்றே அம்சமாக பொருந்தினார் விக்ரம்.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் சக்சஸ் மீட்டில் பேசிய விக்ரம், “ஜெயம் ரவி, கார்த்தி இருவரும் மணிரத்னத்தை கொண்டாட வேண்டும் என கூறியிருந்தார்கள். அதை நானும் அப்படியே வழிமொழிகிறேன்” என்றார். மேலும், “பொன்னியின் செல்வனுக்கு கிடைத்த வரவேற்பு எங்களை நெஞ்சம் நிறைந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. பத்திரிகைகளும் ஊடகங்களும் தொடக்கத்திலிருந்து பெரும் பலமாக இருந்தது. இந்த நாவலை வாசித்து பல ஆண்டுகளாக அந்த பாத்திரங்களைப் பற்றி தங்களது மனதிற்குள் ஒவ்வொரு வகையில் வரைந்து வைத்துக் கொண்டிருந்தார்கள் வாசகர்கள். ஒவ்வொருவருக்கும் ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், குந்தவை, அருள் மொழிவர்மன் எப்படி இருந்திருப்பார்கள் என ஒரு கற்பனை இருந்திருக்கும். அவர்கள் அத்தனை பேருக்கும் ஒரு முகமும் இருந்திருக்கும். அந்த முகங்கள் அனைத்தும் தற்போது எங்களின் முகமாக மாறிவிட்டது. தற்போது அந்த பாத்திரங்களை பற்றி எண்ணும்போது, எங்களது முகம் உங்களது நினைவிற்கு வருகிறது. இதற்காக இயக்குநர் மணிரத்னத்திற்கு தாழ்மையான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறினார்.
தொடர்ந்து பேசிய விக்ரம், “நடிகர்களுக்கு எப்போதும் ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதனை இந்தப் படத்தின் மூலம் எளிதாக சென்றடைந்திருக்கிறோம். சரித்திர கதைகளில் இடம்பெறும் பாத்திரங்கள் மீது ரசிகர்கள் காட்டும் அன்பு, இன்று எங்களுக்கும் கிடைத்துள்ளது. 40 ஆண்டுகளாக தியேட்டர்களுக்கே செல்லாதவர்கள் பொன்னியின் செல்வன் பார்க்க வந்தார்கள் என நினைக்கும் போது மகிழ்ச்சி இரு மடங்காகிறது. இளைய தலைமுறையினர் பலரும், ‘இந்த படத்தை பார்த்து விட்டோம். இருந்தாலும் பொன்னியின் செல்வன் நாவலின் ஐந்து பாகங்களையும் படிக்க வேண்டும் என்பார்கள். இந்தப் படத்தை பார்த்துவிட்டு, எல்லோரும் வாசிப்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கிவிட்டார்கள். இது மிகப் பெரிய விசயம். இதற்கான எல்லாப் புகழும் இயக்குநர் மணிரத்னத்திற்கும், தயாரிப்பாளர் சுபாஸ்கரனுக்கும் தான் சேரும்” என பேசினார்.
விக்ரமைத் தொடர்ந்து மணிரத்னம் பேசியதாவது:-
எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை. அமரர் கல்கிக்கு முதல் நன்றி. இந்த நாவலை படித்த ஒவ்வொரு வாசகர்களுக்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். இதனை படமாக உருவாக்க வேண்டும் என பேராசைப்பட்டேன். இதனை அனுமதித்து, அங்கீகாரம் கொடுத்த அனைவருக்கும் நன்றி. சுபாஸ்கரன் அவர்களை சந்தித்து, பொன்னியின் செல்வன் நாவலை படமாக்க விரும்புகிறேன் என்று சொன்னேன். ரெண்டே நிமிடத்தில் சரி என்று சொல்லிவிட்டார். அவர் இல்லையென்று சொன்னால், இந்த படைப்பு உருவாகி இருக்காது. அதனால் அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் அனைவரும் ஒரு குடும்பமாக தங்களின் ஒத்துழைப்பை அளித்தனர். அவர்கள் பங்களிப்பு செய்யவில்லை என்றால் இது நடந்திருக்காது. அதுவும் கொரோனா காலகட்டத்தில் உடல் எடையை சரியாக வைத்திருந்து ஒத்துழைப்பு கொடுத்தது மறக்க முடியாது. மேலும் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். எல்லோரின் உழைப்பும் எனக்கு பயத்தை தந்தது. ஒவ்வொருவரும் என்னை நம்பி பணியாற்றும்போது அதற்கான பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என நினைத்துக் கொள்வேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்த பத்திரிக்கையாளர்களுக்கும் ஊடகங்களுக்கும் என் இதயத்தின் அடியாழத்தில் இருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது:-
நல்ல படைப்பை சர்வதேச அளவிற்கு கொண்டு சென்று பெரும் வெற்றியை பதிவு செய்த பத்திரிக்கையாளர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி. தமிழ் ஊடகங்கள் மட்டுமில்லாமல், இந்திய ஊடகங்கள் மட்டுமல்லாமல் சர்வதேச ஊடகங்கள் அனைத்தும் பொன்னியின் செல்வன் படைப்பை கொண்டாடுகிறார்கள். இன்று உலகம் டிஜிட்டல் மயமான பிறகு அனைத்தும் எளிதாக இருக்கிறது. நட்சத்திரங்களைப் பற்றி ஊடகங்கள் சொல்லும் விசயங்கள் எங்களை விரைவாகவும், எளிதாகவும் வந்தடைகிறது. உலகம் முழுவதும் அனைவரும் இந்த படைப்பை விமர்சனம் செய்திருக்கிறார்கள், வாழ்த்துக்கள்.
இவை அனைத்திற்கும் மூல காரணம் மணிசார் தான். அவர் நாற்பது வருடத்திற்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒப்பற்ற படைப்பை வழங்கி கலை சேவை செய்து வருகிறார். பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை எப்படி கொண்டாடுவது என்று துல்லியமாக தெரியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. மணி சார் மற்றும் சுபாஸ்கரன் சார் ஆகிய இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த வெற்றியைக் கடந்த வாழ்த்துக்கள். இந்த தருணத்தில் நான் ஒரு விசயத்தை பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இப்படி ஒரு பிரம்மாண்டமான வெற்றியை அளித்துவிட்டு, இயக்குனர் மணிரத்னம் அமைதியே உருவமாக அமர்ந்திருக்கிறார். இவரை நாம் கொண்டாட வேண்டும். அவரின் கண் முன்னால், அவரை வைத்துக் கொண்டு அனைவரும் பேச வேண்டும். அவர் தமிழ் சினிமாவில் பொக்கிஷம். அவரை பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.