கடந்த 1991ல் மத்திய நிதியமைச்சராக இருந்த மன்மோகன்சிங், தாராளமயமாக்கல் கொள்கையை கொண்டு வந்ததற்காக நாடே அவருக்கு கடமைப்பட்டிருக்கிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி புகழ்ந்து பேசியுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற டி.ஐ.ஓ.எல் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இந்தியாவில் ஏழைகளுக்கு பயனளிக்கக் கூடிய தாராள பொருளாதார கொள்கை தேவை. கடந்த 1991ல் மன்மோகன்சிங் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது, பொருளாதார சீர்திருத்தத்தை துவங்கி வைத்து, தாராளமயமாக்கல் கொள்கையை கொண்டு வந்தார். இதன்மூலம் இந்தியாவுக்கு புதிய பாதையை காட்டினார். இதற்காக தேசமே மன்மோகன்சிங்கிற்கு கடமைப்பட்டிருக்கிறது. அவர் கொண்டுவந்த பொருளாதார சீர்திருத்தம் காரணமாகத்தான் நான் 1990களின் மத்தியில் மஹாராஷ்டிராவில் அமைச்சராக இருந்தபோது சாலை திட்டங்களுக்கு என்னால் நிதி திரட்ட முடிந்தது. விவசாயிகளுக்கும் ஏழைகளுக்கும் அதிக பலன்கள் கிடைப்பதை நோக்கமாக கொண்ட தாராள பொருளாதார கொள்கையே நாட்டுக்கு இப்போதைய தேவை. தாராளமயமாக்கல் கொள்கை ஒரு நாட்டை எப்படி மேம்படுத்தும் என்பதற்கு சீனா ஒரு சிறந்த உதாரணம். இவ்வாறு அவர் பேசினார்.