தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெறக்கோரி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் கையெழுத்திட்ட மனு குடியரசுத் தலைவர் மாளிகையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் – மாநில அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அண்மைக் காலமாக கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆளுநருக்கு எதிராக அந்தந்த மாநில அரசு கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
இதேபோல் தமிழ்நாட்டில் திமுக மற்றும் ஆளுநர் ஆர்என் ரவி இடையிலான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. ஆளுநர் ஆர்என் ரவி பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் சனாதனம், திராவிடம், திருக்குறள், திருவள்ளுவர், கலாச்சாரம், தமிழ், பண்பாடு உள்ளிட்டவை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்து மதம் பற்றி பேசுவது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுமட்டுமல்லாமல் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களையும் ஆளுநர் ஆர்என் ரவி வேண்டுமென்றே கிடப்பதில் போட்டுள்ளதாக திமுக தரப்பில் குற்றச்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற குடியரசுத் தலைவரிடம் முறையிட திமுக முடிவு செய்தது. தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறும் குறிப்பாணையில் கையொப்பமிட திமுக கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி திமுக மற்றும் தோழமைக் கட்சி எம்பிக்கள் அனைவரும் ஆளுநரை திரும்பப் பெறக் கோரும் குறிப்பாணையில் கையெழுத்திட்டனர்.
இந்த நிலையில் தமிழக ஆளுநரை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை மனு திமுக சார்பில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சமர்பிக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் அளிக்கப்பட்டுள்ள அந்த மனுவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வருவதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் நீண்ட காலமாக நிலுவையில் வைத்துள்ளார். அக்.31ம் தேதி வரை மட்டும் ஒப்புதல் தராமல் 20 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கிடப்பில் போட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை கொள்கையளவிலும், செயல்பாட்டளவிலும் எதிர்ப்பது அரசியமைப்பு சட்டத்தை மீறுவதாகும் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.