ஆளுநர் மூலம் மாநில அரசின் அதிகாரம் ஆக்கிரமிப்பு: பினராயி விஜயன்

மாநில அரசுகளின் அதிகாரத்தை அத்துமீறி ஆக்கிரமிக்க ஒன்றிய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் பினராயி விஜயன் அரசுக்கும், மாநில ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. பல்கலைக்கழக நியமனங்கள் தொடங்கி பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கேரள அரசுக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வரும் சூழலில் பல்கலைக்கழகங்களில் வேந்தர் பதவியை நீக்குவது தொடர்பாக கேரள சட்டமன்றத்தில் சட்ட முன்வடிவினை நிறைவேற்ற பினராயி அரசு முனைப்பு காட்டி வருகிறது.

ஆளுநர்களின் நடவடிக்கைகளை எதிர்த்து வரும் 15ம் தேதி ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு இடது முன்னணி அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் கேரள அரசு அரசியல் சாசனத்திற்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டியிருந்த ஆளுநர் ஆரிப் அரசுடனான பொது விவாதத்தில் தயார் என்றும் ஆளுநர் மாளிகைக்கு வந்து பாருங்கள் என்றும் சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆளுநருக்கு பதிலளிக்கும் விதமாக அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க முடியவில்லை என்றால் பாஜக ஆட்சி செய்யாத மாநில அரசுகளை கவிழ்க்க ஆளுநர் மூலமாக சூழ்ச்சி நடைபெறுவதாக ஆளுநர் கூறி இருக்கிறார். பாஜக அரசின் குதிரை பேரம் தோல்வியில் முடிந்தால் மாநில அரசுகளின் அதிகாரத்தை அத்துமீறி ஆக்கிரமிக்க ஒன்றிய அரசு ஆளுநர்களை பயன்படுத்துவதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். இதையெல்லாம் பார்க்கும் போது நாட்டில் ஜனநாயக அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடப்பதை உணர முடிகின்றது என்றும் பினராயி விஜயன் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் பல்கலைக்கழக வேந்தர் பதவியிலிருந்து கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானை நீக்குவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவர அந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கேரள அரசுக்கும், ஆளுநா் ஆரிஃப் முகமது கானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரளத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கேரளத்தில் உள்ள அப்துல் கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் ராஜேஷ்வரி நியமனம் சட்டவிரோதமானது என்று கூறி துணைவேந்தர் நியமனத்தை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. துணைவேந்தர் பதவிக்கு குறைந்தது 3 பேரை மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என்ற நிலையில் மாநில அரசு ஒருவரின் பெயரை மட்டுமே பரிந்துரைத்துள்ளது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவின் அடிப்படையில், ஒருவரது பெயர் மட்டுமே பரிந்துரைக்கப்பட்ட, மாநிலத்தின் இதர 11 பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கு, விளக்கம் கேட்டு ஆளுநா் நோட்டீஸ் பிறப்பித்தாா். மேலும் அவர்கள் தங்கள் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால், இதற்கு மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆளுநரின் உத்தரவை எதிர்த்து துணைவேந்தர்கள் தொடர்ந்த வழக்கில் ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதன் தொடர்ச்சியாக, மாநிலத்தின் அனைத்துப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்கும் ஆளுநர் ஆரிப் முகமது கானை அப்பதவியில் இருந்து நீக்க அவசரச் சட்டம் கொண்டு வர பினராயி விஜயன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது.