கருத்து பரிமாற்றத்தில் திமுகவுக்கு நம்பிக்கை இல்லை என பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தலைவருக்கு கடிதம் எழுத திமுக முடிவு செய்தது. அதன்படி, குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட உள்ள கோரிக்கை மனுவில் கையொப்பமிடுமாறு திமுக மற்றும் திமுகவின் தோழமைக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அழைப்பு விடுத்திருந்தார். அதனையேற்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி எம்.பி.க்கள் பலரும் கையெழுத்திட்டனர். அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கோரிக்கை மனு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. சீர்க்கேட்டின் சிறந்த எடுத்துக்காட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கருத்து பரிமாற்றத்தில் திமுகவுக்கு நம்பிக்கை இல்லை என பாஜக எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து வானதி சீனிவாசன் கூறுகையில், ஆளுநர் பேச்சில் திமுகவுக்கு உடன்பாடு இல்லையெனில் ஜனநாயக ரீதியில் பதில் அளிக்கலாம். அதைவிடுத்து அவரை பதவியிலிருந்து நீக்குமாறு கோருவதன் மூலம், கருத்து பரிமாற்றத்தில் திமுகவுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.
அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக சட்டத்தை மீறும்போது, சட்டம் – ஒழுங்கை பாதிக்கும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டதைகூட, வாக்கு வங்கி அரசியலுக்காக மறைக்க முயலும்போதும் மாநில அரசை தட்டிக்கேட்கும் கடமை பொறுப்பில் ஆளுநர் இருக்கிறார். கடமையை செய்தவரை எதற்காக பதவியிலிருந்து நீக்க வேண்டும்? எனவும் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், திமுக அரசுக்கு தனது விருப்பம் போல செயல்பட முடியவில்லை. எல்லா உண்மைகளையும், தவறுகளையும் ஆளுநர் கண்டுபிடித்து விடுகிறார். அதனை மத்திய உள்துறை அமைச்சர், பிரதமருக்கு உடனுக்குடன் சொல்லி விடுகிறார் என வருத்தம் இருக்கலாம். அதனால், தி.மு.க.வினருக்கு இழப்பும் ஏற்பட்டிருக்கலாம். தமிழகத்தின் நலன், தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டே ஆளுநர் செயல்பட்டு வருவதாகவும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவ மதத்தை பரப்புவதற்காக தமிழகம் வந்த ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறளில் உள்ள குறைகளை, விமர்சன கண்ணோட்டத்தோடு விமர்சிப்பது எப்படி மதச்சாயம் பூசுவதாகும் என்பது தெரியவில்லை. திருக்குறளில் இந்து மதம் வலியுறுத்தும் அறம், பொருள், இன்பம் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்து கடவுள்கள் பற்றிய குறிப்புகளும் உள்ளன. திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த கிறிஸ்தவ பாதிரியார் ஜி.யு.போப், அதிலுள்ள ‘ஆன்மிகம்’ என்ற ‘ஆன்மா’வை தவிர்த்து விட்டார் என ஆளுநர் கூறியிருக்கிறார். இந்த விமர்சனத்திற்காக கொந்தளிக்கும் திமுகவினர், திருக்குறள் பற்றி, பெரியார் ஈ.வெ.ரா. கூறியதை ஒருமுறை படித்து பார்க்க வேண்டும் எனவும் வானதி சீனிவாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.