தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை: டிடிவி தினகரன்!

எல்லைப் பகுதியில் மின்னணு மறுஅளவை செய்யும் கேரள அரசுக்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை. இந்த முறை தமிழகத்தின் நிலங்களும் பறிபோய்விடுமோ என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கேரள மாநில அரசு கடந்த நவம்பர் 1ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரீசர்வே பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆக்கிரமிப்பு அகற்றம், நிலவரையறை, இடங்களை வகைப்படுத்துதல் ஆகியவற்றுக்காக இப்பணிகளை மேற்கொள்வதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். ரீ சர்வே பணிகளில் 1500 சர்வேயர்கள், 3200 உதவியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த பணிகளை 4 ஆண்டுகளுக்குள் முடிக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில எல்லைப் பகுதியில் பல்வேறு இடங்களில் கேரள அரசு தமிழக நிலங்களை கேரளாவிற்கு சொந்தமானது என பதிவு செய்து பலகைகள் வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக எல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள், வன ஆர்வலர்கள், விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள மாநில அரசு எடுக்கும் இந்த டிஜிட்டல் ரீ சர்வேயால் தமிழகத்தை ஒட்டியுள்ள தமிழகத்தின் நிலங்கள் பறிபோகும் அபாயம் உள்ளதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

மறு அளவீடு செய்ய வேண்டுமானால் முதலில் தமிழக – கேரள எல்லையை அளவிட வேண்டும். அதனை செய்யாமல் வருவாய் நிலங்களை கேரள அரசு டிஜிட்டல் ரீசர்வே செய்வதால் தமிழகத்தில் 1400 சதுர கி.மீ வனத் தோட்ட பகுதிகளை இழக்கும் நிலை ஏற்படும் என தமிழக – கேரள எல்லைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறி வருகின்றனர். கேரளா உருவானபோது எல்லை மறுவரையை முறையாகச் செய்யாததால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை அருகே உள்ள தமிழக வனப்பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறுகின்றனர். இது போன்று எல்லைப்பகுதி நிலங்களில் குளறுபடிகள் நடப்பதால் தமிழக அரசு விழிப்புடன் இருந்து நமது உரிமையை நிலைநாட்ட வேண்டும் என விவசாயிகள் மற்றும் வனவியல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கேரளா அரசின் நடவடிக்கைக்கு அமமுக தலைவர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

எல்லைப் பகுதியில் சட்டவிரோதமாக மின்னணு மறுஅளவை(Digital Re-Survey) செய்து, தமிழகத்திற்குச் சொந்தமான கிராமங்களை முழுவதுமாக தமது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு கேரள அரசு முயற்சித்து வருவதாக வெளிவரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கேரளாவின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது இருமாநில எல்லை பகுதியில் சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்திற்கு கூட்டு சர்வே செய்வதற்கு அப்போது தமிழகத்துடன் ஒத்துழைக்காத கேரளா, இப்போது தமிழகத்தின் அனுமதியின்றியே இந்த அளவீட்டு பணியை மேற்கொள்வதை அனுமதிக்க முடியாது. எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழகத்திற்குச் சொந்தமான பல இடங்களை ஏற்கனவே படிப்படியாக ஆக்கிரமித்து வைத்திருக்கும் கேரளா, தற்போது முழுமையாக அவற்றைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், கடந்த 1ஆம்தேதி முதல் நடைபெறும் இந்த அத்துமீறலை தடுத்து நிறுத்தாமல் தி.மு.க அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே தமிழக உரிமைகள் பறிபோவது வாடிக்கை. இந்த முறை தமிழகத்தின் நிலங்களும் பறிபோய்விடுமோ? ஸ்டாலின் அரசு விழித்துக்கொள்ளுமா? இல்லை தமது கூட்டணி கட்சி ஆட்சி நடத்தும் கேரளாவிற்காக தமிழக நிலப்பகுதியை தூங்குவது போல நடித்து விட்டுக்கொடுக்கப் போகிறார்களா?. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.