6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் பதவி விலகுவாரா: கி.வீரமணி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் எஞ்சிய 6 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகுவாரா என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி உள்ளிட்ட 6 பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நிலைப்பாட்டிற்கு விரோதமாக பேரறிவாளன் விடுதலை, நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி, உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை வரவேற்கிறோம். ஏற்கெனவே தந்த தீர்ப்பையொட்டி, உச்சநீதிமன்றம் இதனைத் தந்துள்ளது. தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஏற்காமல் ஆளுநர் முட்டுக்கட்டை போட்டது – சட்டப் பிழை என்பதற்கான சான்றே இந்தத் தீர்ப்பு. உச்ச நீதிமன்றத்தின் இந்த இரண்டு ‘குட்டு’கள் போன்ற நடவடிக்கைக்குப் பிறகாவது தமிழ்நாடு ஆளுநர், பதவி விலகுவாரா என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வியாகும்! இனியாவது அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து தவறாமல் ஆளுநர்கள் நடக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.