7 பேர் விடுதலை தாமதமாக காரணமே ஆளுநர் ரவி தான்: வைகோ!

30 ஆண்டுகளுக்கு பிறகு 7 பேருக்கும் விமோசனம் பிறந்துள்ளது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மேலும், ஆளுநர் ஆர்.என்.ரவி மனசாட்சி, மனிதாபிமானம் அற்றவர் என வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட நிலையில் எஞ்சிய 6 பேரையும் விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு பற்றி அரசியல் தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தீர்ப்பை வரவேற்றுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ‘எந்தத் தவறும் செய்யாமல் 30 ஆண்டுகள் இருண்ட சிறையில், தூக்குக் கயிற்றின் நிழலில் சித்திரவதைப்பட்டவர்களுக்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு விமோசனம் பிறந்துள்ளது. ராஜீவ் காந்தி கொலையில் எந்த தொடர்பும் இல்லாதவர்களின் 30 ஆண்டு கால வாழ்க்கை மரண இருளிலே அழிந்தது. இந்த 30 ஆண்டு கால வாழ்க்கை திரும்ப வரப்போகிறதா? இழந்து போன காலம் திரும்ப வரப்போவதில்லை. எனினும் இப்போதாவது கிடைத்த இந்த விடுதலை பெரிய நிம்மதி. மனசாட்சி இல்லாத ஆளுநர் இந்தத் தீர்ப்பு ஆளுநருடைய அராஜக போக்கிற்கு கிடைத்த சரியான பதிலடி. அவர்களின் விடுதலை தாமதமானதற்கு காரணமே தமிழக ஆளுநர் தான். மனசாட்சியும், மனிதாபிமானமும் அற்றவர் தமிழ்நாட்டில் ஆளுநராக இருக்கிறார் என்பது மிகவும் துரதிருஷ்டவசமானது, என வைகோ கூறியுள்ளார்.