இமாச்சலப் பிரதேச தேர்தலில் 66% வாக்கு பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேச மாநிலத்தில், முதலமைச்சர் ஜெய்ராம் தாக்குர் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மாநில சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 12ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்றும், டிசம்பர் 8ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி மொத்தம் உள்ள 68 தொகுதிகளில், நேற்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அந்தவகையில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே கடும் குளிரையும், பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்களித்தனர். இமாச்சலப் பிரதேச தேர்தலுக்காக 7,881 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவுக்கு 50,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் பாதுகாப்பு பணிகளுக்கு 25,000 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேபோல் இமாச்சலப் பிரதேச தேர்தலில் மொத்தம் 412 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட்டுனர். ஆம் ஆத்மி 67 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 11 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 53 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டனர். மொத்தம் 68 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட இமாச்சல் சட்டமன்றத்தில், 35 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். எனவே தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்ற முனைப்பில், ஆளும் பாஜக தீவிரமாக உள்ளது. கங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளும் களத்தில் உள்ளதால் அம்மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
இந்தநிலையில் மாலை 5 மணி வரை நிலவரப்படி 65.92 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த துணை ராணுவ பாதுகாப்புடன், வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.