மன்னர் சார்லஸ் மீது முட்டைகளை வீசிய நபருக்கு முட்டை சாப்பிட தடை விதித்து நூதன தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸுக்கு பிரிட்டன் மன்னராக முடி சூட்டப்பட்டுள்ளது. அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுகிறார். மன்னர் மூன்றாம் சார்லஸ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது தாயாருக்கு அமைக்கப்படும் சிலைகளை திறந்து வைத்து வருகிறார்.
அந்த வகையில், வடகிழக்கு இங்கிலாந்தின் யோர்க் நகரத்தில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மன்னர் சார்லஸும், ராணி கமிலாவும் சென்றிருந்தனர். அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களை நோக்கி மன்னரும், ராணியும் கையசைத்து உரையாடி கொண்டிருந்தனர். அப்போது, அக்கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் ‘இந்த நாடு அடிமைகளின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. நீங்கள் மன்னர் அல்ல’ என்று முழக்கமிட்டவாறே மன்னர் சார்லஸை நோக்கி முட்டைகளை வீசினார். ஆனால், அவர் மீது முட்டைகள் விழவில்லை. மன்னர் ஆட்சியை விமர்சிக்கும் போராட்டங்கள் பிரிட்டன் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்று வரும் நிலையில், மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட நிகழ்வு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மன்னர் மீது முட்டை வீசியதாக, யோர்க் பல்கலைக்கழக மாணவரான 23 வயதான பாட்ரிக் தெல்வெல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், மன்னர் சார்லஸ் மீது முட்டைகளை வீசிய அவருக்கு முட்டை சாப்பிட தடை விதித்து நூதன தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் தொடர்பாக கருத்து தெரிவித்த அரச வர்ணனையாளர் ஓமிட் ஸ்கோபி, ‘இந்த தண்டனை அவருக்கு தக்க பாடத்தை கற்பிக்கும்.’ என்றார். இந்த சம்பவம் குறித்து திகைத்து போனதாக தெரிவித்துள்ள யோர்க் பல்கலைக்கழகம், தவறான நடத்தை நடைமுறைகள் தொடர்பாக மதிப்பாய்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளது.