செருப்பளவு உள்ள தண்ணீர் மட்டுமே எடப்பாடி பழனிசாமி நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்கிறார் என்று அமைச்சர் தா.மோ. அன்பரசன் விமர்சித்துள்ளளார்.
சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட முகலிவாக்கம், கொளப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “மழைநீர் பெரும்பாலான இடங்களில் வடியவில்லை. பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர். சென்னையில் வெள்ள நீர் எங்கும் தேங்கவில்லை என்பது பொய்யான தகவல்” என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறியதாவது:-
ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கொளப்பாக்கம் – கணேஷ் நகர், முகலிவாக்கம், திருவள்ளுவர் நகர், ஆறுமுகம் நகர் ஆகிய 3 பகுதிகளில் தான் தண்ணீர் தேங்கியுள்ளது. இதற்கு காரணம் மாங்காடு, பூந்தமல்லி காட்டுப்பாக்கம் தண்ணீர் போரூர் ஏரிக்கு வந்து மதுரவாயில் புறவழிச் சாலையில் தண்ணீர் உரிய கல்வெர்ட் அமைக்காததால் தண்ணீர் வெளியேற முடியாமல் ஐய்யப்பன் தாங்கல், பரணிப்புத்தூர், சின்னபனிச்சேரி, கொளத்துவான்சேரி ஆகிய பகுதியிலிருந்து ஆண்டுதோறும் தண்ணீர் தேங்கி பெரிய அளவில் பாதிக்கப்பட்டார்கள். நாங்கள் எதிர்கட்சியாக இருந்தபோதும் கூட மக்களுக்கு உதவி செய்து வந்தோம். இதற்கு எல்லாம் காரணம் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான்.
2006-11 நாங்கள் ஆட்சில் இருந்தபோது போரூர் ஏரியியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கு ரூ. 18 கோடி ஒதுக்கீடு செய்து திட்டம் தயாரித்தோம். தேசிய நெடுஞ்சாலைத் துறை கால்வாய் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது, பொதுப்பணித்துறை இத்திட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெற்றது. இவ்வழக்கில் 2017 ஆம் ஆண்டு இரண்டு துறைகளும் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் பொதுப் பணித்துறைக்கு பொறுப்பேற்றிருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஆண்டு வெள்ளத்தின் போது, முதல்வர் நேரடியாக என்னை அழைத்து சென்று இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தி, அதிகாரிகளுக்கு எல்லாம் உத்தரவிட்டு இந்த நிலையை முற்றிலுமாக போக்கிட வேண்டும் என்ற நல்ல நோக்கில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கி தந்தார். செம்பரம்பாக்கத்தில் இருந்து வரும் தந்தி கால்வாய்க்கு கட் அண்டு கவர் அமைக்கும் பணியும், போரூரிலிருந்து ஒரு கால்வாய் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. மதுரவாயில் புறவழிச்சாலையில் ஒரு புஸ்- கல்வெர்ட்டு நேற்று தான் அந்த சாலையில் ஒரு புறத்திலிருந்து மறு புறத்தில் வெளி வந்தது. தற்போது இதன் வழியாக 400 கன அடி நீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மதுரவாயில் புறவழிச்சாலையை கடந்து மறுபுறம் வடியும் தண்ணீர் மணப்பாக்கம் கால்வாய் வழியாக செல்லும் போது, கால்வாய்க்கும் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் பாய்வதால் நீர் தேங்கி உள்ளது. இதனை சீர் செய்ய கால்வாயின் உயரத்தை உயர்த்தி கட்டி வருகிறோம்.
கடந்த ஆட்சியில் வரதராஜபுரம், முடிச்சூர் மழையால் எந்த அளவிற்கு பாதித்தது என்பது உங்களுக்கு எல்லாம் தெரியும். 8000 முதல் 10000 பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். அப்போது முதல்வராக இருந்த எடப்பாடி இப்பகுதிக்கு வரவே இல்லை. இப்போது நாங்கள் வந்த பிறகு இந்த பகுதியில் தண்ணீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? தற்போது அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்தினால் முன்னாள் முதல்வர் செருப்பளவு உள்ள தண்ணீர் மட்டுமே நடந்து மக்களிடம் குறைகளை கேட்கிறார்.
கடந்த ஆட்சிக்காலத்தில் மணப்பாக்கம் கால்வாய், கொளப்பாக்கம் கால்வாய்களில் தண்ணீரே செல்லவில்லை. நாங்கள் ஆட்சி பொறுப்பேற்றபின்தான் மணப்பாக்கம், கெருகம்பாக்கம் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி, அகலப்படுத்தி கரைகளை உயர்த்தி கட்டி வருகிறோம். முதல்வர் 2,3 முறை ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார். இப்பணிகள் மழைக்காலம் முடிந்தவுடன் விரைவாக முடிக்கப்படும். வருங்காலங்களில் இப்பகுதி மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படா வண்ணம் தடுக்கப்படும்.
நேற்று சிதம்பரம், சீர்காழி பகுதிகளில் வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற முதல்வர் அவர்கள் என்னை 3 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வெள்ள பாதிப்பினையும், மக்களுக்கு செய்யப்பட்ட நிவாரண நடவடிக்கைகளையும் கேட்டறிந்தார். மாங்காடு, காட்டுப்பாக்கம், பூந்தமல்லி ஆகிய இடங்களுக்கு வந்து சேரும் தண்ணீர் போரூர் ஏரியின் வழியாக அடையாற்றில் கலக்க வேண்டும். அதற்கான கால்வாய்களை அமைப்பதற்கு தான் மாண்புமிகு முதல்வர் அவர்கள் நிதி ஒதுக்கி தற்போது பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது ஆய்வு செய்யும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 9 ஆண்டு காலமாக நெடுச்சாலைத்துறை மற்றும் பொதுப் பணித்துறைக்கு பொறுப்பேற்றிருந்த போது ஆட்சி முடியும் தருவாயில், டெண்டர் மட்டும் வைத்தது ஏன்? அப்போது நெடுஞ்சாலைத் துறையால் கட்டப்பட்ட கால்வாய்கள் மேடாகவும், கொள்ளளவு குறைவானதுமான கட்டியதால் பணிகள் முடிக்கப்பட்டாலும் தண்ணீர் தேங்கி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற பல்வேறு சிக்கல்களை நீங்கள் செய்து விட்டு சென்றுள்ளீர்கள். அந்தப் பகுதிகளில் எல்லாம் கொள்ளளவு அதிகம் கொண்ட புஸ்அப் – கல்வெர்ட்டுகளை இரவு பகலாக நாங்கள் அமைத்து வருறோம். மொத்தமாக 1000 HP திறன் கொண்ட 35 க்கும் மேற்பட்ட மோட்டர்களை கொண்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நிச்சயமாக கூறுகிறேன் அடுத்த ஆண்டு மழைக்காலத்தில் கண்டிப்பாக இந்தப் பகுதிகளில் வெள்ள பாதிப்பே ஏற்படாது.
ஆலந்தூர் பகுதியில் கண்ணன் காலனி, மாதவன்புரம், மாரிசன் தெரு, நங்கநல்லூர், பழவந்தாங்கல் ஆகிய பகுதிகளில் மழை வந்தால் 3 முதல் 4 அடி வரை தண்ணீர் தேங்கும் இந்த மழையில் ஒரு சொட்டு தண்ணீர் கூட அங்கு தேங்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு நான் சட்ட மன்ற உறுப்பினராக இருந்த போது சட்டப் பேரவையில் இது குறித்து 3, 4 முறை பேசியிருக்கிறேன். அவை எல்லாம் அவைக் குறிப்பில் உள்ளது. எதிர்கட்சி எம்.எல்.ஏ என்ற காரணத்தினாலேயே மக்களின் பிரச்சினை என்று கூட கருதாமல் எந்தவித பணியையும் இவர்கள் செய்யவில்லை. இன்று வந்து மக்களை சந்திப்பதில் என்ன நியாயம் இருக்கிறது. எங்களுக்கு மக்கள் தான் முக்கியம். அவர்களுக்கு எவ்வித பாதிப்பும் எற்படாமல் இருக்க மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுப்பார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் 20 மீட்டர் அகலக் கால்வாயில் மட்டுமே வெளியேறியது. இதனுடன் ஆதனூர் கால்வாயிலிருந்து வரும் தண்ணீரும் இணைந்து வெளியேறும் இடத்தில் தண்ணீர் செல்லாத நிலை இருந்தது. இதை முதல்வர் கவனத்திற்கு சென்றபின் அதற்கென தனியாக ரூ.70 கோடி நிதி ஒதுக்கி, 20 மீட்டர் அகலக் கால்வாயை 80 மீட்டராக அகலப்படுத்தி இன்று தண்ணீர் விரைவாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பிரச்சினை உள்ள இடங்கள் எல்லாம் தனி கவனம் செலுத்தி, திட்டங்கள் தீட்டி, நிதி ஒதுக்கி பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. கடலோர மாவட்டங்களில் குறு, சிறு தொழில்முனைவேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை கண்காணித்து வருகிறோம். சீர்காழி பகுதியில் 44 செ.மீ. அளவிற்கு மழை பொழிந்துள்ளது அங்கு ஏதேனும் பாதிப்பு இருந்தால் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.