தமிழக ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி டிச.29-ல் ராஜ்பவன் முற்றுகை: முத்தரசன்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ந் தேதி ராஜ்பவன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் அறிவித்துள்ளார்.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, எந்த ஒரு நிகழ்ச்சியில் பேசினாலும் தீவிர இந்துத்துவா கருத்துகளைப் பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். திருக்குறளை ஆன்மீக குரலாக, இந்துத்துவத்தின் குரலாக சுட்டிக்காட்டி பேசுகிறார். ஆளுநர் ஆர்.என்.ரவியின் தொடர்ச்சியான இந்த கருத்துகளை தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வேண்டும் என்பதும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை. அண்மையில் திமுக எம்.பிக்களிடையே கையெழுத்து பெற்று, ஆளுநர் ரவியை திரும்ப பெற வேண்டும் என ஜனாதிபதியிடம் மனு கொடுத்திருந்தது.

இந்நிலையில் ஆளுநர் ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி டிசம்பர் 29-ந் தேதி சென்னை ராஜ்பவன் முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் முத்தரசன் அறிவித்திருக்கிறார். இந்தப் போராட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்க உள்ளன.