வெளிநாடு வாழ் இந்தியர்கள் தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைப்பதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்
இந்தோனேஷியாவின் பாலி தீவில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றுள்ளார். மாநாட்டின் இடையே, இந்தோனேஷியாவின் பாலியில் இந்திய சமுதாயத்தினர் உள்ளிட்ட 800க்கும் மேற்பட்டோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடியதுடன் அவர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையேயான நெருங்கிய கலாச்சார, நாகரீக தொடர்புகளை எடுத்துக் கூறினார். இரு நாடுகளுகளுக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் வர்த்தக தொடர்பை பிரதிபலிக்கும் “பாலி ஜத்ரா” என்னும் மிகப் பழமையான பாரம்பரியத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, இந்தியாவுக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் காணப்படும் பொதுவான அம்சங்களை குறிப்பிட்டு பேசினார்.
இந்திய சமுதாயத்தினர், தாங்கள் வசிக்கும் நாட்டுக்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய கடின உழைப்பு மூலம், இந்தியாவின் பெருமையையும், அந்தஸ்தையும் உயர்த்தி வருவதாக பிரதமர் மோடி அவர்களை பாராட்டினார். இந்தியா-இந்தோனேஷியா உறவில் காணப்படும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சி பற்றி கூறிய அவர், இந்த உறவை வலுப்படுத்துவதில் இந்திய சமுதாயத்தினர் மிக முக்கியப் பங்காற்றுவதையும் சுட்டிக்காட்டினார்.
இந்தியாவின் வளர்ச்சிப் பற்றி விளக்கிய பிரதமர், டிஜிட்டல் தொழிலநுட்பம், நிதி, சுகாதாரம், தொலைத் தொடர்பு, விண்வெளித் துறை போன்ற பல்வேறு துறைகளில் இந்தியா அடைந்து வரும் அற்புதமான வளர்ச்சியையும், சாதனைகளையும் பட்டியலிட்டார். இந்தியாவின் வளர்ச்சிக்கான செயல் திட்டம், உலகின் அரசியல் பொருளாதார அபிலாசைகளை உள்ளடக்கியது என்று கூறிய அவர், தற்சார்பு இந்தியாவின் தொலை நோக்கு உலக நலனுக்கானது என்றார்.
மத்தியப்பிரதேசத்தின் இந்தூரில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறவுள்ள வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டிலும், குஜராத்தில் நடைபெற உள்ள பட்டத் திருவிழாவிலும் கலந்து கொள்ளுமாறு இந்திய சமுதாயத்தினர் மற்றும் இந்திய நண்பர்களுக்கு பிரதமர் மோடி அப்போது அழைப்பு விடுத்தார்.