சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என்று அன்புமணி தெரிவித்து உள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய சமூகக்கேடு என்பதை அரசே ஒப்புக்கொண்டு விட்ட நிலையில், அது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் 3 முறை விவாதிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயமானதல்ல. எந்த நோக்கத்திற்காக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதை தமிழக அரசு இன்று முதலே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுனரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் அன்புமணி ராமதாஸ், சமூக வலைதளமான டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 14 பேரை அவர்களின் படகுடன் சிங்களப் படையினர் கைது செய்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி விரட்டியடித்து உள்ளனர். சிங்களப் படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த ஒரு மாதத்தில் நான்காவது கைது நடவடிக்கை இதுவாகும். அக்டோபர் 20 ஆம் தேதி 3 பேர், 27 ஆம் தேதி 7 பேர், கடந்த 6 ஆம் தேதி 15 பேர், இப்போது 14 பேர் என மொத்தம் 39 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இப்படியாக சிங்களக் கடற்படையின் அத்துமீறல் தொடர்கதையாகிக் கொண்டிருக்கிறது.
சிங்களக் கடற்படையினரின் அத்துமீறலை பா.ம.க. தொடர்ந்து கண்டித்து வருகிறது; மத்திய அரசுக்கு முதலமைச்சர் தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார்; இராமேஸ்வரம் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதன் பிறகும் தொடரும் சிங்களப் படையினரின் அத்துமீறலுக்கு முடிவே இல்லையா?
மீனவர்கள் கைது விஷயத்தில் மத்திய அரசு இனியும் அமைதி காக்கக் கூடாது. இலங்கை அரசுடன் பேச்சு நடத்தி மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டவர்களையும், ஏற்கனவே கைதானவர்களையும் விடுவிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.