தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது: உயர்நீதிமன்றம்

விருதுநகர் மாவட்டத்தில் வைக்கப்பட்ட இமானுவேல் சேகரன் சிலை விவகாரத்தில், தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் அம்மச்சியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் சமீபத்தில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்து இருந்தார். அதில் அவர், “அம்மச்சியாபுரத்தில் மொத்தம் 126 வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் அனைவருமே தேவேந்திர குல வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அம்மச்சியாபுரத்தில் இமானுவேல் சேகரன் வெண்கலச் சிலை அமைக்க முடிவு செய்தோம். இதற்காகக் கடந்த ஆக.29இல் தமிழக அரசிடம் முறையாக அனுமதி கேட்டு மனு அளித்தோம். கடந்த செப். 10ஆம் தேதி இமானுவேல் சேகரன் சிலை நிறுவப்பட்டது. இருப்பினும், முறையாக அனுமதி பெறும் வரை சிலையை மூடிவைக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இமானுவேல் சேகரனின் சிலையைத் திறக்க அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்ட இருந்தது.

இந்த மனுவை விசாரித்து நீதிபதி சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்தார். அதாவது, ‘சிலை அமைக்க அரசிடம் முறையாக அனுமதி பெற வேண்டும். ஆனால், மனு கொடுத்த 12-வது நாளில் அனுமதி பெறாமல் சிலை வைத்துள்ளனர். அம்மச்சியாபுரம் கிராமத்துக்குச் செல்லும் பாதையில் பிற சமூகத்தினர் வசிக்கின்றனர். இப்பகுதியில் முன்பு சாதி மோதல்களும் நடைபெற்றுள்ளன. மேலும், சிலை வைக்க முறையாக அனுமதி பெற வேண்டியது அவசியம். சிறந்த மனிதர்களின் சிலையை முறையாக அனுமதி பெறாமல் வைப்பது ஏற்புடையது அல்ல. மனுதாரரின் மனு விருதுநகர் மாவட்ட ஆட்சியரிடம் உள்ளது. சிலை வைக்க அனுமதி வழங்க பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அதைப் பின்பற்றி சிலையை வைக்க அனுமதி பெற்றிருக்க வேண்டும். எனவே, முறையாக அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள சிலையை இம்மாதம் 19-க்குள் அந்த இடத்திலிருந்து அகற்றிப் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தமிழ்நாட்டில் அரசு அனுமதியின்றி எந்த சிலையையும் வைக்கக்கூடாது. முறையான அனுமதி பெறும் வரை சிலைகளைத் திறப்பதோ, மரியாதை செலுத்துவதோ கூடாது என்றும் முன்னாள் முதலமைச்சரின் சிலையை வைக்கவே நீதிமன்றம் அனுமதி தரவில்லை. சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெற்ற பிறகு சிலையை வைக்கலாம்’ என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.