இந்திய கடற்படை பேருந்து மோதியதில் கர்ப்பிணியும் வயிற்றில் இருந்த குழந்தையும் பலி!

சென்னை மெரினா கடற்கரைச் சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் நிறைமாத கர்ப்பிணியும் அவர் வயிற்றில் இருந்த குழந்தையும் பலியானது.

சென்னை நகரின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக மெரினா கடற்கரை சாலை உள்ளது. எப்போதுமே மிகவும் பரபரப்பாக காணப்படும் இந்த சாலை வழியாக தான் சென்னை தலைமை செயலகம், ஐ என் எஸ் பல்லவா கடற்படை தளம் உள்ளிட்டவைகளுக்கு செல்ல வேண்டும். இந்த நிலையில் நேற்று மெரினா கடற்கரை சாலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அதே சாலையில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து அதிவேகமாக மோதியதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் அதில் பயணித்த திருவல்லிக்கேணியை சேர்ந்த லலிதா என்பவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். அருகில் இருந்தோர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் லலிதா அதற்கு முன்னதாகவே உயிரிழந்து விட்டார்.

இந்நிலையில் உயிரிழந்த லலிதாவின் கணவர் சிவா ரெட்டியும் கடற்படையில் பணியாற்றி வருவது தெரியவந்தது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக லலிதா நிறைமாத கர்ப்பிணியாக இருந்ததும் அவரது வயிற்றில் சிசு இருந்ததும் தெரிய வந்தது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அந்த பெண்ணின் சடலத்தை மருத்துவமனைக்கு அவசரகதியில் எடுத்துச் சென்றுள்ளனர்.

லலிதா மரணம் அடைந்தாலும் அவரது வயிற்றில் உள்ள குழந்தையை காப்பாற்ற முடியுமா என மருத்துவர்கள் பரிசோதித்தனர். ஆனால் வயிற்றில் இருந்த எட்டு மாத குழந்தையும் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே ஓட்டுனரின் கவன குறைவு இந்த விபத்துக்கு காரணம் என தெரியவந்தது.

முன்னதாக விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற கடற்படை வாகனத்தை ஓட்டுனர் நிறுத்தாமல் இயக்கியிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த பேருந்தை விரட்டிச் சென்று பிடித்ததாக கூறப்படுகிறது. மேலும் அதிலிருந்து கடற்படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களை தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபம் அடைந்த பொதுமக்கள் கடற்படை வாகனத்தை சேதப்படுத்தினர். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.