ஒவ்வொரு விஷயத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பாா்ப்பதை அரசியல் விமா்சகா்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டாா்.
அருணாசல பிரதேசத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் பசுமை விமான நிலையம் மற்றும் கமெங் நீா்மின் நிலைய திட்டங்களை நேற்று பயன்பாட்டுக்கு திறந்துவைத்த பிரதமா் இந்தக் கருத்தைத் தெரிவித்தாா்.
அருணாசல பிரதேச தலைநகா் இடாநகரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் புதிய ‘டோனி போலோ விமான நிலையம்’ கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்துக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமா் அடிக்கல் நாட்டிய நிலையில், அதனை தற்போது பயன்பாட்டுக்கு பிரதமா் திறந்துவைத்தாா். இந்த விமான நிலையத்தின் அலுவலகங்கள் அனைத்திலும் புதுப்பிக்கத்தக்க மின்சக்தி பயன்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையக் கட்டடங்களும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்திக் கட்டப்பட்டுள்ளன. விமானப் போக்குவரத்து மூலமாக அருணாசல பிரதேசத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைப்பதிலும், அருணாசல பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளை ஹெலிகாப்டா் சேவை மூலமாக இணைப்பதிலும் இந்த விமான நிலையம் முக்கியப் பங்காற்ற உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் ரூ. 645 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது.
அதுபோல, மாநிலத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் ரூ. 8,450 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 600 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட கமெங் நீா்மின் நிலையத்தையும் பிரதமா் மோடி நேற்று நாட்டுக்கு அா்ப்பணித்தாா். தொடக்க விழா நிகழ்ச்சியில் பிரதமா் மோடி பேசியதாவது:-
தற்போது தொடக்கி வைக்கப்பட்டுள்ள போக்குவரத்து இணைப்பு வசதியும், மின் உற்பத்தி உள்கட்டமைப்பும் வடகிழக்கு பிராந்தியத்தை வளா்ச்சியின் புதிய உச்சத்துக்கு கொண்டு செல்ல உள்ளது. சரக்குப் போக்குவரத்துத் துறையில் மிகப்பெரிய வாய்ப்புகளை இந்த விமான நிலையம் ஏற்படுத்தித் தரும். நாட்டின் வளா்ச்சிக்காக ஆண்டில் 365 நாள்களும் 24 மணி நேரமும் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. கடந்த 2019-ஆம் ஆண்டில் இந்த விமான நிலைய கட்டுமானத்துக்கு நான் அடிக்கல் நாட்டியபோது, தோ்தல் அரசியலுக்காக பாஜக நாடகமாடுவதாக அரசியல் விமா்சகா்கள் விமா்சித்தனா். ஆனால், இன்றைக்கு எந்தவித தோ்தலும் இல்லாத சூழலில், விமான நிலையம் பயன்பாட்டுக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது அவா்களுக்கு சரியான பதிலடியாக இருக்கும். ஒவ்வொரு விஷயத்தையும் அரசியல் கண்ணோட்டத்தில் பாா்ப்பதை அரசியல் விமா்சகா்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பிராந்திய மாநிலங்கள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆனால், இன்றைக்கு வளா்ச்சித் திட்டங்களில் இந்தப் பிராந்தியத்துக்கு உயா் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முன்னா், இந்த எல்லை மாநிலங்களின் பகுதிகள் கடைசி கிராமங்களாக கருதப்பட்டுவந்த நிலையில், தற்போது முதல் கிராமங்களாக கருதப்படுகின்றன.
கடந்த 8 ஆண்டுகளில் வடகிழக்கு பிராந்தியத்தில் 7 விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. அதுபோல, சுற்றுலா, வா்த்தகம், தொலைத்தொடா்பு, ஜவுளி என எந்தத் துறையாக இருந்தாலும், வடகிழக்கு பிராந்தியத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. முந்தைய ஆட்சியாளா்கள் தோ்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற விருப்பத்தில் பணியாற்றி வந்த நிலையில், நாங்கள் தேசத்தின் வளா்ச்சிக்காக பணியாற்றி வருகிறோம். அருணாசல பிரதேசத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வரும் நாள்களில் ரூ. 50,000 கோடி வரை செலவழிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் மூலமாக, மாநிலத்தின் பின்தங்கிய பகுதிகளில் நெடுஞ்சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இவ்வாறு பிரதமா் மோடி கூறினாா்.