பஞ்சாப் மாநிலத்தைப் போல தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக பாமக நிறுவனா் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
பஞ்சாப் மாநிலத்தில் பணியாற்றும் அரசு ஊழியா்கள் அனைவருக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் பழைய ஓய்வூதியத்தை செயல்படுத்தும் மாநிலங்களின் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்துள்ள நிலையில், இந்தப் பட்டியலில் முதலிடம் பிடித்திருக்க வேண்டிய தமிழகம் அதற்கான நடவடிக்கைகளை எடுக்காதது வருத்தமளிக்கிறது. தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவதில் எந்த சிக்கலும் இல்லை. பிற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது மிகவும் எளிதாகும்.
பிற மாநிலங்களில் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பணியாளா்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகையும், அரசின் பங்களிப்புத் தொகையும் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் இந்தத் தொகை அவ்வாறு செலுத்தப்படவில்லை; மாறாக இந்தத் தொகை தனிக்கணக்கில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அதனால் அந்த நிதியை அரசின் கணக்குக்கு மாற்றிக் கொள்வதில் எந்தவிதமான தடையும் இல்லை. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை தாமதப்படுத்தாமல் தமிழக அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளாா்.