குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய ஷாலினி அஜித்!

நடிகை ஷாலியின் பிறந்தநாளை கணவர் குடும்பத்துடன் சேர்ந்து தனியார் நட்சத்திர விடுதியில் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது பரவலாக பகிரப்பட்டு வருகின்றன.

நடிகர் அஜித் குமார் குடும்பத்துடனும், உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர்களுடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

தமிழ் சினிமாவுக்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, காதலுக்கு மரியாதை படம் மூலம் கதாநாயகியாக மாறியவர் நடிகை ஷாலினி. இவர் அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகர் அஜித்குமாருடன் காதல் வயப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 22 ஆண்டுகள் ஆனாலும், இன்றளவும் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக இருவரும் கொண்டாடப்படுகின்றனர். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.

திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு ஓய்வளித்துள்ள ஷாலினி, நேற்று தனது 43வது பிறந்தநாளைக் கொண்டாடினார். குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிடும் அஜித்குமார், மனைவி ஷாலினிக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில், பிறந்தநாளை நட்சத்திர விடுதியில் வைத்து கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
கேக் வெட்டும்போது மகள், மகனுடன் நடிகர் அஜித்குமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அஜித்குமார் தனது பிஸியான நேரத்திலும் குடும்பத்தின் முக்கியத்துவம் கருதி மனைவியின் பிறந்தநாளை நட்சத்திர விடுதியில் கொண்டாடியுள்ளார்.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‛துணிவு’ படம் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.