ரஷ்ய கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்த உக்ரைன்!

கருங்கடலில் ரஷ்ய கப்பல்களை ‘டிரோன்’ மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 2 மாதங்களை கடந்து தொடர்கிறது. இதில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் நிர்மூலமாகியுள்ளன. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். இருந்தபோதிலும், உக்ரைனை அடிபணிய வைக்கும் ரஷ்யாவின் இலக்கு இன்னும் எட்டப்படவில்லை. மாறாக உக்ரைனை போலவே ரஷ்யாவும் இந்த போரில் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கருங்கடலில் இருந்து கடல் வழி தாக்குதலை தலைமையேற்று நடத்தி வந்த, ரஷ்யாவின் மோஸ்க்வா என்ற பிரமாண்ட போர்க்கப்பலை நவீன ஏவுகணைகள் மூலம் தாக்கி கடலில் மூழ்கடித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்தது. ஆனால் அதை மறுத்த ரஷ்யா, போர்க்கப்பலில் தீப்பற்றி, அதனால் கடலில் மூழ்கியதாக தெரிவித்தது. இதில் ஒரு மாலுமி பலியானதாகவும், 20-க்கும் அதிகமானோர் மாயமானதாகவும் ரஷ்ய ராணுவம் தெரிவித்தது. அவர்களின் கதி என்ன என்பது இன்னமும் தெரியவில்லை.

இந்த நிலையில் கருங்கடலில் நேற்று ரஷ்யாவின் 2 ரோந்து கப்பல்களை டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் தாக்கி அழித்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து உக்ரைன் ராணுவ தளபதி வலேரி ஜலுஷ்னி கூறுகையில் “இன்று காலை ஸ்மினி தீவு அருகே கருங்கடலில் ரஷ்யாவின் ராப்டார் பிரிவு ரோந்து கப்பல்கள் இரண்டை உக்ரைன் வீரர்கள் ‘டிரான்’ மூலம் தாக்கி அழித்தனர்” என்றார்.

இதனிடையே கருங்கடலில் ரஷ்ய கப்பல்கள் டிரோன் மூலம் தாக்கி அழிக்கப்பட்ட வீடியோ ஒன்றை உக்ரைன் ராணுவம் வெளியிட்டுள்ளது. எனினும் இது குறித்து ரஷ்யா எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில் உக்ரைனின் மெலிடோபோல் நகரில் முற்றுகையிட்டுள்ள ரஷ்ய வீரர்கள் அந்த நகரில் இருந்து, அறுவடை எந்திரங்கள், டிராக்டர்கள் உள்ளிட்ட விவசாய உபகரணங்களை திருடி ரஷ்யாவின் செச்சினியாவுக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரையில் 5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.38 கோடி) மதிப்பிலான விவசாய உபகரணங்கள் ரஷ்ய படைகளால் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மரியுபோலின் இரும்பு ஆலை பதுங்கு குழியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள், அழுகிய நிலையில் ஏராளமான சடலங்கள் இருப்பதாக உக்ரைன் ராணுவத்தின் 12வது படைப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார். அங்கு சிக்கியிருக்கும் நூற்றுக்கணக்கான மக்களை மீட்கும் பணி தொடங்கி உள்ளது.

துறைமுக நகரமான மரியுபோலை சமீபத்தில் ரஷ்ய ராணுவம் கைப்பற்றிய நிலையில், அங்குள்ள மிகப்பெரிய இரும்பு ஆலை அமைந்துள்ள பகுதி மட்டும் உக்ரைன் படையினர் வசம் உள்ளது. அங்கு 2,000க்கும் மேற்பட்ட மக்கள் பதுங்கி உள்ளனர். மரியுபோல் நகரம் போரில் முற்றிலும் உருக்குலைந்த நிலையில், இரும்பு ஆலையில் சிக்கியவர்களை மீட்கும் பணி நேற்று தொடங்கியது. ரஷ்ய படையின் குண்டுவீச்சில் தரைமட்டமாகி கிடக்கும் இரும்பு ஆலையில் பதுங்கி குழிகளில் இருந்து மக்கள் சிலர் நேற்று மீட்கப்பட்டனர். 46 பேரை ரஷ்ய ராணுவம் வெளியேற்றி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் ராணுவத்தின் 12வதுபடைப்பிரிவு தலைவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், “ஆக்கிரமிப்பில் உள்ள இரும்பு ஆலைக்குள் நூற்றுக்கணக்கான குழந்தைகள், மக்கள் சிக்கி தவிக்கின்றனர். 500க்கும் மேற்பட்ட உக்ரைன் படைவீரர்கள், அழுகிய நிலையில் ஏராளமான சடலங்கள் கிடக்கின்றன. பதுங்கு குழியில் உள்ளவர்களை வெளியேற்ற மேலும் சில நாட்கள் கூடுதலாக தேவைப்படும்,’’ என தெரிவித்தார்.

ஐநா. மனித உரிமைகள் ஆணையத்தின் செய்தி தொடர்பாளர் சாவியானோ அப்ரூ, “இரண்டு மாதங்களுக்கு மேலாக மரியுபோல் இரும்பு ஆலையில் சிக்கி தவித்த மக்கள் சிறிது சிறிதாக மீட்கப்பட்ட பிறகு, அவர்களுக்கு உளவியல் சோதனை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் வழங்கப்படும்,’’ என தெரிவித்தார்.

இதற்கிடையே ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்து வரும் அமெரிக்கா உள்ளிட்ட பல மேற்கத்திய நாடுகள், உக்ரைனுக்கு ராணுவ ஆயுதங்கள், நிதி உதவிகளை செய்து வருகின்றன. சர்வதேச நாடுகள் தங்கள் ஆதரவை தெரிவிக்கும் விதமாக, அந்நாடுகளின் தலைவர்கள் உக்ரைனுக்கு நேரில் சென்று அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்து வருகின்றனர். நேற்று முன்தினம் உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு சென்ற அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்ட பின், அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது, அமெரிக்க எம்பி.க்கள் சிலரும் உடனிருந்தனர். அப்போது சுதந்திரத்துக்கான உக்ரைன் போரில் அமெரிக்கா உறுதியாக துணை நிற்கும் என்று பெலோசி உறுதி அளித்தார்.

ஐரோப்பிய கூட்டணி நாடுகளின் எரிசக்தி துறை அமைச்சர்கள் நேற்று சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில், ஐரோப்பிய கூட்டணி நாடுகளான பல்கேரியா, போலந்து ஆகிய நாடுகளுக்கு ரஷ்யா காஸ் வினியோகத்தை நிறுத்தியது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடைகளை விதிப்பது பற்றியும் ஆலோசனை நடந்தது. இந்த புதிய பொருளாதார தடைகள் இந்த வார இறுதியில் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.