ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் தரவில்லை: அமைச்சர் ரகுபதி

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

முந்தைய அதிமுக ஆட்சியில் 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது; 2021 பிப்ரவரியில் பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அச்சட்டம் செல்லாது என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் தேதி தீர்ப்பளித்தது. ரத்து செய்யப்பட்ட சட்டத்திற்கு எதிராக புதிய சட்டம் இயற்ற வேண்டும் என தமிழகத்தில் தொடர்ந்து கோரிக்கை குரல்கள் ஒருபுறம் எழுப்பப்பட்டு வரும் நிலையில், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து கடந்த ஜூன் 10-ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் எனவும், அது குறித்து அரசுக்கு பரிந்துரைக்க வல்லுனர் குழு அமைத்து தமிழக அரசு அறிவித்தது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அமைச்சரவைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் துறைகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்றனர். அந்த அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்திற்கு தமிழக அமைச்சரவை சார்பாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆளுநரின் ஒப்புதலை பெற்று விரைவில் சட்டமாக்கப்படும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெற ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். சட்டத்துறையில் புதிய சட்டப் பட்டதாரிகளுக்கான தன்னார்வப் பயிற்சித் திட்டத்தை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய தமிழக அரசால் நிறைவேற்றப்பட்ட அவசர சட்டத்திற்கு அன்றைய தினமே ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கூறினார். ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் சட்ட மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, சட்ட மசோதா குறித்து ஆளுநர் எந்த விதமான விளக்கமும் இதுவரை கேட்கப்படாத நிலையில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதே நேரத்தில் திருப்பி அனுப்பவும் இல்லை. ஆன்லைன் ரம்மி தடைச் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மீண்டும் வலியுறுத்துவதற்காக ஆளுநரை சந்திக்க நேரம் கேட்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள்ளாக நேரம் ஒதுக்கப்படும் என நம்புகிறோம்

ஜல்லிக்கட்டு போட்டி, 10% இட ஒதுக்கீடு தொடர்பாக திமுக மற்றும் இதர கட்சிகள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தெரிவித்த அமைச்சர், வழக்கு விசாரணையின் போது தேவையான வாதங்களை அரசு முன்வைக்கும். ஜல்லிக்கட்டு விளையாட்டு தொடர்பாக பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் ரகுபதி, ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்த தேவையான வாதங்களை வழக்கு விசாரணையின் போது அரசு முன்வைக்கும் என்றும் குறிப்பிட்டார்.