தமிழகத்தில் திறமையற்ற பொம்மை முதல்வர் ஆட்சி செய்வதால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, இன்று தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை சென்னை ராஜ்பவனில் சந்தித்தார். கவர்னரிடம் சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து கோரிக்கை மனு அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கவர்னருடனான சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி, சி.வி.சண்முகம், தங்கமணி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரும் உடன் இருந்துள்ளனர்.
சந்திப்பிற்கு பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் நடைபெறும் மோசமான நிகழ்வுகளை கவர்னரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே அவரை சந்தித்து மனு அளித்தோம். ஏற்கனவே மத்திய உளவு ஏஜென்சி தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டுவந்தும் திமுக அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியத்துடன் செயல்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்து 18 மாதங்களில் சட்டம், ஒழுங்கை பராமரிக்க தவறியதால் தமிழக மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. திறமையற்ற பொம்மை முதல்வர் ஆட்சி செய்வதால் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.
கனியாமூர் பள்ளி மாணவி மர்ம மரணம் விவகாரத்தில் போலீஸ் மற்றும் உளவுத்துறை செயல்படவே இல்லை. கலவரத்திற்கு மிக முக்கிய காரணம் உளவுத்துறையும், முதல்வர் கையில் வைத்திருக்கும் போலீஸ் துறையும் தான். கமிஷன், கலெக்சன், கரப்சன் என்று ஊழல் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆட்சி செய்து வரும் திமுக அரசின் முறைகேடுகள் குறித்தும் கவர்னரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் கடத்தல்காரர்கள் பள்ளி, கல்லூரிகளை விற்பனை கூடாரமாக வைத்துள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் தங்கு தடையின்றி கிடைப்பது தினசரி ஊடக செய்தியாக வெளிவருகிறது. மாணவ, மாணவிகளை பாதுகாக்க முடியாத அரசு, போதைப்பொருட்களை கடத்தி நிற்பவர்களின் நலன்களை பாதுகாப்பதிலேயே குறியாக உள்ளது. முதல்வர், அமைச்சர்கள், திமுக எம்எல்ஏ.,க்கள் தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீர்குலைவது குறித்து கவலைப்படவில்லை. அரசு கஜானாவில் இருந்து அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பணப்பலன்கள் அடைவதிலேயே குறிக்கோளாக உள்ளனர். தங்கள் சுயநலத்திற்காக உழைக்கும் நேரத்தில் 50 சதவீதத்தை சட்டம், ஒழுங்கு பிரச்னைக்கு ஒதுக்கினால் மக்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறை உள்ளது. இந்த பற்றாக்குறைக்கு சுகாதாரத்துறை அமைச்சர், மருத்துவர்கள், பணியாளர்கள் மீது பழியை போட்டுத் தப்பிக்கிறார் என்பதே உண்மை. மருந்துகளை கொள்முதல் செய்ய டெண்டரை இறுதி செய்யவில்லை. கால்பந்து வீராங்கனை பிரியா சாதாரண மூட்டு வலிக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தவறான சிகிச்சையால் உயிரிழந்தார். முதல்வர் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் போதுமான மருந்துகள், சோதனை வசதிகள் இல்லாததால் வீராங்கனை அலைக்கழிக்கப்பட்டுள்ளார். தவறான சிகிச்சையால் சிறு வயதிலேயே வீராங்கனை இறந்ததற்கு அரசு மருத்துவமனைகளின் அலட்சியம் மட்டுமே காரணம். அரசு மருத்துவமனைகளில் மருந்து கொள்முதலில் மிகப்பெரும் ஊழல் நடந்துக்கொண்டிருக்கிறது.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவிடப்படாமல் திமுக அரசால் பறிக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தை பறிக்கும் செயல், அந்த அமைப்பின் அடிப்படை புரிதலுக்கு எதிரானது. உள்ளாட்சித்துறைகளில் விஞ்ஞான ரீதியாக ஊழல் நடந்து கொண்டிருக்கிறது. பேனர் அடித்து விளம்பரம் தேடுவதிலும் கூட ஊழல் செய்துள்ள திமுக அரசு. 350 ரூபாய் மதிப்புள்ள பேனருக்கு ரூ.7,906 என கணக்கு காட்டி கோடிக்கணக்கில் ஊழல் செய்துள்ளது.
திமுக அரசு தங்களுடைய குடும்ப தொழில் நலனையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அரசு கேபிள் டிவி கழகத்தை முடக்க முயற்சிக்கிறது. அரசு கேபிள் டிவிக்கு மூடுவிழா நடத்தும் திமுக அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.
தமிழகத்தில் 24 மணி நேரமும் டாஸ்மாக் பார்கள் இயங்குகின்றன. டாஸ்மாக்கிலும் கோடிக்கணக்கில் மெகா ஊழல் நடந்துள்ளது. அதனை உடனடியாக விசாரிக்க வேண்டும். பார்கள் ஒதுக்கீடு செய்வதற்கான டெண்டர் தொடர்பான வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. டெண்டர் விடப்படாத நிலையில் மதுக்கடைகளை ஒட்டி சட்டவிரோத நவீன பார்கள் செயல்பட்டு வருகின்றன. சட்டவிரோத பார்களில் மதுபானங்கள் அதிக விலைக்கு 24 மணி நேரமும் விற்கப்படுகின்றன. அரசின் கஜானாவிற்கு செல்ல வேண்டிய வரிப்பணம் இந்த துறையின் அமைச்சர், அதிகாரிகள், திமுக பிரமுகர்களின் பாக்கெட்டுகளுக்கு செல்கிறது. திமுக.,வின் தவறுகளை தகுந்த ஆதாரங்களை வழங்கி நடவடிக்கை எடுக்க கவர்னரிடம் முறையிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.