ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்எஸ்எஸ் மேல்முறையீடு!

தமிழகத்தில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்துள்ளது.

காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்தின் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரியது ஆர்.எஸ்.எஸ். ஆனால் தமிழக அரசு இந்த 50 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம், அணிவகுப்பு நடத்த அனுமதி மறுத்தது. இதனால் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 50க்கும் மேற்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், பல்லடம், அருமனை மற்றும் நாகர்கோவில் ஆகிய 6 இடங்களை தவிர, 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கினார். அதேநேரத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தில் பங்கேற்போர் ஆதார் அட்டை உள்ளிட்டவைகளை தர வேண்டும் என்பதுடன் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனடிப்படையில் 44 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு, ஊர்வலங்கள் உள் அரங்க நிகழ்வாகத்தான் நடத்த முடியும் என்கிற நிலைமை ஏற்பட்டது. இந்த நிபந்தனைகளை மீறினால் நடவடிக்கை எடுக்கலாம் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் போலீசாருக்கு அனுமதியும் தந்தது.

இதில் அதிருப்தி அடைந்த ஆர்.எஸ்.எஸ். 44 இடங்களில் நடைபெற இருந்த அணிவகுப்பு ஊர்வலத்தைக் கைவிட்டது. பின்னர் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடந்தது. சென்னை உயர்நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளில் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறும் ஏற்படுத்தக்கூடாது; லத்தி உள்ளிட்ட ஆயுதங்களை ஊர்வலத்தில் எடுத்து செல்லக் கூடாது; மதம், மொழி அடிப்படையில் பிரிவினையை தூண்ட கூடாது. பொது, தனியார் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் சார்பில் மேல்ஜ்முறையீட்டு மனு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்துக்கு அனுமதி மறுக்கப்பட்ட அதே காலத்தில் பல கட்சிகள் பொது இடங்களில் போராட்டங்கள் நடத்த அனுமதி தரப்பட்டது. கருத்து சுதந்திரத்தை கருத்தில் கொள்ளாமல் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தாக்கல் செய்த இந்த மனுவை 2 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க கூடும். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர இருக்கிறது.