சாவர்க்கரை விமர்சிக்கும் என்னையும் மிரட்ட சொல்லுங்க: சீமான்

இந்துத்துவா சித்தாந்தத்தின் முன்னோடி சாவர்க்கரை விமர்சித்ததற்காக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு மிரட்டல் விடுப்பதை போல சாவர்க்கரை விமர்சிக்கும் என்னையும் மிரட்ட சொல்லுங்களேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக கூறியுள்ளார்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்காக கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். தற்போது மத்தியப்பிரதேசத்தில் நடைபயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, சாவர்க்கரை கடுமையாக விமர்சித்தார். சாவர்க்கர் சிறையில் இருக்கும் போது ஆங்கிலேயர்களிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை வாங்கினார் எனவும் ஆதாரங்களை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசினார். இது மகாராஷ்டிரா அரசியலில் மட்டுமல்ல தேசிய அரசியலிலும் கடும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிராவில் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ்- சிவசேனா கூட்டணி உள்ளது. ராகுல் காந்தியின் சாவர்க்கர் தொடர்பான கருத்தை சிவசேனா கடுமையாக எதிர்த்துள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோரின் சாவர்க்கர் குறித்த ராகுல் விமர்சனத்துக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர். மேலும் மகாராஷ்டிராவில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் கருத்துக்கு மகாத்மா காந்தி அடிகளின் பேரன் துஷார் காந்தி ஆதரவு தெரிவித்திருந்தார். இது தொடர்பாக துஷார் காந்தி கூறுகையில், 1930களிலேயே மகாத்மா காந்தியை படுகொலை செய்ய முயற்சி நடந்தது. ஆனால் பால்தாக்கரேவின் தந்தை இந்த முயற்சியை தடுத்தார். இதனை சிவசேனாவின் உத்தவ் தாக்கரே புரிந்து கொள்ள வேண்டும். சாவர்க்கர் ஆங்கிலேயருக்கு மட்டும் உதவவில்லை; மகாத்மா காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு துப்பாக்கியை ஏற்பாடு செய்ததும் சாவர்க்கர்தான் என்றார். ஆனால் பாஜகவோ, காந்தி கொலை வழக்கில் சாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார். சாவர்க்கர் குறித்து பொய்யான தகவலை பரப்பக் கூடாது என்றது.

இந்த களேபரங்களின் உச்சமாக, சாவர்க்கரை விமர்சனம் செய்தால் உங்கள் தந்தை (ராஜீவ் காந்தி) சென்ற இடத்துக்கு நீங்கள் அனுப்பி வைக்கப்படுவீர்கள் என ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் சிலரை மத்திய பிரதேச போலீசார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் சாவர்க்கர்- ராகுல் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு சீமான் கூறியதாவது:-

நானும் கூட சாவர்க்கர் பற்றி பேசி இருக்கிறேன். ராகுல் காந்தியை மிரட்டுகிறவர்களை என்னை மிரட்ட சொல்லுங்க பார்ப்போம். ராகுல் காந்தி பார்க்க வெள்ளையா இருப்பதால் சின்ன பையன் என நினைக்கிறாங்க. வீர சாவர்க்கர் என சொல்லிவிட்டால் அவர் வீரனா? உண்மையிலேயே வெள்ளையர்களிடம் கெஞ்சி ஓய்வூதியம் வாங்கி சாப்பிட்டவர்தானே சாவர்க்கர். நான் உங்களுக்கு ரொம்ப விசுவாசமாக இருப்பேன்.. ரொம்ப நன்றி உள்ளவனாக இருப்பேன்னு வெள்ளைக்காரனிடம் சொன்னவர்தானே சாவர்க்கர். அதனால்தான் கோழையைப் போய் ஏன் வீர சாவர்க்கர்னு சொல்றீங்கன்னு கேட்கிறேன்.

சாவர்க்கர் வீரன் என்றால் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங், சுகதேவ், என் பாட்டன் மருது சகோதரர்கள், வேலுநாச்சியார், அழகுமுத்துகோன் யார்? அவர்கள் எல்லாம் உண்மையில் விடுதலைக்காக போராடியவர்கள். நாங்கள் யாரும் ஒளிந்து வாழவில்லை. சுதந்திரத்துக்காக போராடி உயிர் தியாகம் செய்தோம். எங்களுக்கு என்ன பெயர் என்ன? இவ்வாறு சீமான் கூறினார்.