ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது!

தமிழக காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக உள்ள என் மீது தமிழக காங்கிரஸ் கட்சி எடுத்த நடவடிக்கை செல்லுமா என்பதை அகில இந்திய காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என எம்எல்ஏ ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்திற்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் வந்துள்ளனர். அப்போது நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவரை மாற்ற வேண்டும் என நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் தலைமையில் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது இரு தரப்பினருக்கிடையே மோதல் போக்கு ஏற்பட்ட போது நெல்லை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகளான ராபர்ட், ஜோஸ்வா, டேனியல் ஆகிய 3 பேர் காயமடைந்தனர்.

இந்த நிலையில் ரூபி மனோகரனை கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ரூபி மனோகரனின் ஆதரவாளர்கள், வன்முறைக்கு ரஞ்சன் குமார்தான் காரணம் என குற்றம்சாட்டினர். இதனிடையே மோதல் சம்பவம் தொடர்பாக ரூபி மனோகரன், ரஞ்சன்குமார் ஆகியோருக்கு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதில் இன்றைய தினம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் ரூபி மனோகரன் நேரில் விசாரணைக்கு ஆஜராவதற்கு கால அவகாசம் கேட்டார். அதே வேளையில் ரஞ்சன் குமார் நேரில் ஆஜராகி தன் தரப்பு விளக்கத்தை கொடுத்துவிட்டார். இந்த நிலையில்தான் ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ரூபி மனோகரன் கூறியதாவது:-

ஒரு லட்சம் பனை கன்றுகளை நடும் விழாவுக்கு களக்காட்டில் 10 நாட்களுக்கு முன்பே ஏற்பாடு செய்துவிட்டோம். அடுத்தடுத்து தொகுதி பணிகள் செய்ய வேண்டியிருப்பதால் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணையை வேறு ஒரு நாளுக்கு தள்ளி வைக்க வேண்டும் என கால அவகாசம் கோரி ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி தலைவர் ராமசாமிக்கு கடிதம் எழுதியிருந்தேன். ஆனாலும் என்னிடம் விசாரணை ஏதும் நடத்தாமல் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். இதற்காக நான் கட்சியை குறை சொல்ல மாட்டேன். எனினும் எனக்கு இந்த சம்பவம் வருத்தமாகவே உள்ளது.

கட்சிக்காக நான் கடந்த 10 , 20 ஆண்டுகளாக பாடுபட்டு வருகிறேன். இந்த தொகுதியில் காங்கிரஸ் வளர்ச்சி அடைந்து வந்தது. அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையை நடத்தி வருகிறார். நான் கட்சியின் பொருளாளராக உள்ளேன், சட்டமன்ற உறுப்பினராக உள்ளேன். என் மீது இடைநீக்க உத்தரவை தமிழக காங்கிரஸ் எடுக்க முடியாது. இதை அகில இந்திய காங்கிரஸ் தலைமைதான் எடுக்க முடியும். எனவே என் மீதான நடவடிக்க தவறா என்பதை டெல்லி காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்யும், நான் குற்றமற்றவர். இவ்வாறு ரூபி மனோகரன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ செல்வபெருந்தகை பேசுகையில் தொகுதி பணிகளை ஏற்கெனவே ஒப்புக் கொண்டதற்காக ஒழுங்கு முறை கமிட்டியில் ஆஜராக நேரம் கேட்டிருந்தார். ஆனால் அவரிடம் விசாரணையே நடத்தாமல் நடவடிக்கை எடுத்துள்ளார்கள். விசாரணையே நடத்தாமல் ஒருவரை இடைநீக்கம் செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது, கட்சியின் பைலாவில் அப்படி ஏதும் உள்ளதா? இதுகுறித்து டெல்லி தலைமையிடம் முறையிடுவோம் என்றார்.

இந்த நிலையில் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டியில் ஆஜரான எஸ்சி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறுகையில், சத்தியமூர்த்தி பவனில் நடந்த மோதல் சம்பவத்திற்கு ரூபி மனோகரன்தான் காரணம். அவருக்கு பின்புலமாக இருந்து தூண்டி விட்டவர் செல்வபெருந்தகை என நான் கமிட்டியில் சொன்னேன், இதை எப்படி சொல்கிறீர்கள் என கேட்டனர். அதற்கு நான் கடந்த கால வரலாறுகளை சொன்னேன். அதாவது செல்வபெருந்தகை பல்வேறு கட்சிகளில் இருந்துளளார். அவர் எந்த ஒரு கட்சியாக இருந்தாலும் அதில் 2ஆவது தலைவர் என்ற இடத்திற்கு வரும் வரை பொறுமையாக இருப்பார். வந்தவுடன் இது போல் கட்சிக்குள் பிளவு ஏற்படுத்தி வேடிக்கை பார்ப்பார் என ரஞ்சன் குமார் தெரிவித்தார்.