அமெரிக்கா போட்ட எலும்பு துண்டை தென்கொரியா கவ்விக்கொண்டிருக்கிறது: வடகொரியா

அமெரிக்கா தூக்கிப்போட்ட எலும்பு துண்டை தென்கொரியா கவ்விக்கொண்டிருக்கிறது என்று வடகொரிய அதிபரின் சகோதரி ‘கிம் யோ ஜாங்’ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு விமானப்படை பயிற்சியை மேற்கொண்டது. இதனை எதிர்க்கும் வகையில் வடகொரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை தொடர்ச்சியாக ஏவி சோதனை செய்தது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் தென்கொரியாவும், ஜப்பானும் இணைந்து வடகொரிக்கு எதிராக நிற்கையில் அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி தற்போது அமெரிக்காவுக்கும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் எதிராக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த மாதம் இறுதியிலிருந்து இந்த மாதம் தொடக்கம் வரை தென்கொரியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சியை நடைபெற்றது. ஏற்கெனவே வடகொரியாவுக்கும் அமெரிக்காவுக்கும் ஏழாம் பொருத்தம் இருந்து வரும் நிலையில் இவ்வாறு கூட்டு ராணுவ பயிற்சியை தென்கொரியா மேற்கொண்டிருப்பது வடகொரியாவுக்கு கூடுதல் அழுத்தங்களை கொடுத்தது. இதனையடுத்து வடகொரியா கையில் எடுத்த ‘அஸ்திரம்தான்’ பாலிஸ்டிக் ஏவுகணை. இந்த வகை ஏவுகணைகள் கண்டம் விட்டு கண்டம் பாயும் தன்மை கொண்டதால் அமெரிக்கா இதனால் சிறிது கலக்கமடைந்தது. ஏனெனில் வடகொரியா ஏதோ ஒன்று இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி இருந்தால் பரவாயில்லை. மாறாக முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடர்ந்து ஏவுகணைகளை ஏவிக்கொண்டே இருந்ததுள்ளது. விளைவு, ஜப்பானும், தென்கொரியாவும் அமெரிக்காவிடம் புகார் அளிக்க.. அமெரிக்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பஞ்சாயத்தை கூட்டியது. பாலிஸ்டிக் ஏவுகணை ஏவிய விவகாரத்தில் வடகொரியா பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வந்தது. இதற்கு ஆதரவு தெரிவித்து ஜப்பான், தென்கொரியா, பிரிட்டன், பிரான்ஸ், இந்தியா உட்பட 14 நாடுகள் அமெரிக்க பக்கம் நின்றன. ஆனால் ரஷ்யாவும், சீனாவும் வடகொரியா பக்கம் நின்றதால் அமெரிக்காவின் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது.

தீர்மானம் தோல்வியடைந்ததையடுத்து தென்கொரிய தனது பங்குக்கு ஒரு அச்சுறுத்தலை விடுத்தது. அதாவது, தென்கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் வடகொரியாவினுடனான சுதந்திர தடைகளை மறுபரிசீலனை செய்வதாகவும், அதேபோல வடகொரியாவின் ‘சைபர்’ துறையின் மீதான தடைகளும் பரிசீலிக்கப்படும் என்று அறிவித்தது.

இதற்குதான் வடகொரிய அதிபரின் சகோதரி கிம் யோ ஜாங் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில், “இவ்வாறு தடைகள் விதிப்பதன் மூலம் தற்போதைய சூழலிலிருந்து அவர்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு யோசிப்பவர்கள் முட்டாள்கள். அமெரிக்காவின் கைக்கூலியாக இதுபோன்ற தடைகளை விதிக்க முயல்வதன் மூலம் எங்களிடம் அவர்கள் பகைமையைதான் வளர்த்துக்கொள்ள முடியும்” என்று கூறியுள்ளார். மேலும், அமெரிக்கா தூக்கிப்போட்ட எலும்பு துண்டை தென்கொரியா கவ்விக்கொண்டிருக்கிறது என்றும் விமர்சித்துள்ளார்.

அமெரிக்காவை பொறுத்த அளவில், “நீங்கள் எவ்வளவுதான் எங்களிடம் இருந்து ஆயுதங்களை அழிக்க நினைத்தாலும், அது சாத்தியமாகாது. இது எங்களின் தற்காப்பு உரிமை. ஒருவேளை நீங்கள் இதை பறிக்க நினைத்தால் இறுதியில் உங்களுக்கு நரகமே மிஞ்சும்” என்று எச்சரித்திருக்கிறார்.