ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
ஆன் லைன் சூதாட்டத்தால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு தங்களது சொத்துகளை இழக்கும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ஏராளமானோர் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பாக அவசர சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு உச்சநீதிமன்றம் தடை விதித்ததன் காரணமாக தமிழக ஒரு அமைத்து ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக ஆய்வு செய்து சட்டம் இயற்றியது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவிஅன்றைய தினமே பரிசீலித்து உடனடியாக ஒப்புதல் அளித்தார். இது ஆன்லைன் சூதாட்ட எதிர்ப்பு ஆர்வலர்கள், பொதுமக்கள் மத்தியில் நிம்மதிப்பெருமூச்சு விட வைத்தது.
இந்த நிலையில், தமிழக அரசு, அந்த அவசரச் சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்டம் கொண்டு வர முடிவு செய்தது. அதன்படி, ‘தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்தும் சட்ட மசோதா 2022 ஐ சட்டசபையில் தாக்கல் செய்து, நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த மாதம் 28ஆம்தேதி தமிழக அரசு அனுப்பி வைத்தது. இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் தந்து விடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தமிழக ஆளுநர் உடனடியாக ஒப்பதல் அளிக்காத நிலை ஏற்பட்டது.
இதற்கிடையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதா தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, விளக்கங்கள் கேட்டு தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி. கடிதம் எழுதினார். கடந்த 24ஆம் தேதி காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையில் இருந்து கடிதம் கிடைக்கப்பெற்ற நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழக அரசு விளக்க கடிதத்தை அனுப்பி வைத்தது. இந்தநிலையில், தமிழக அரசு கொண்டு வந்த ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் கடந்த மாதம் 1ஆம் தேதி கொண்டு வரப்பட்டது. அதன்பின்னர் சட்டசபை கூடிய நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் தானாகவே காலாவதி ஆகிவிடும்.
இந்தநிலையில் அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்ட பின்னர், தமிழக சட்டசபை கடந்த மாதம் 17ஆம் தேதி கூடியது. நேற்றுடன் 6 வாரங்கள் முடிந்துவிட்டது. எனவே ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் நேற்றுடன் காலாவதியாகி உள்ளது. இதன் காரணமாக ஆன்லைன் சூதாட்டம் முழுவீச்சில் மீண்டும் நடைபெறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இன்று செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-
இணைய வழி சூதாட்டம், ஆன்லைன் ரம்மி, போகோ இவற்றை தடை செய்தல் ஒழுங்குமுறைபடுத்துதல் அவசரகால சட்டத்தின் கால வரையறை நேற்றோடு முடிந்து விட்டது. அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஏற்கனவே ஒப்புதல் தந்தார். அதன் அடிப்படையில் சட்டம் திருத்தப்பட்டு சட்டசபையில் வைக்கப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் இந்த சட்டத்தில் சில சந்தேகங்களை கேட்டு கடிதம் அனுப்பினார். அந்த கடிதத்திற்கு 24 மணி நேரத்திற்குள் விளக்கம் அளித்து தமிழக அரசு மீண்டும் ஆளுநருக்கு அனுப்பியது.
நேற்று மாலைக்குள் ஆளுநர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. அதை தெளிவுபடுத்த தான் தற்போது இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறுகிறது.
ஆளுநருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் முதல் உரையிலேயே மிகத்தெளிவாக தமிழக அரசு விளக்கியுள்ளது. 99 சதவீத மக்கள் ஆன்லைன் ரம்மி, போகோ, இணைய வழி சூதாட்டம் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோன்று உலக சுகாதார நிறுவனமும் ஆன்லைன் ரம்மியை ஒரு நோய் என்றும் அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த நோயை ஒழிக்க வேண்டியது நம்முடைய தலையாய கடமை. அந்த கடமையை தான் தமிழக அரசு சட்டமாக இயற்றி ஆளுநருக்கு அனுப்பியது. ஆளுநர் ஏன் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது அவருக்கே உண்டான வெளிச்சம். காலதாமதம் ஏற்படுத்துவதற்கான அவசியம் கிடையாது. ஏன் காலதாமதம் படுத்துகிறார் என்பது அவருக்கு தான் தெரியும்.
ஆளுநரை நாங்கள் கேள்வி கேட்க முடியாது. அதே நேரத்தில் ஆளுநர் எங்களை கேள்வி கேட்க முடியும். அவர் கேட்ட கேள்விகளுக்கு நாங்கள் சரியான விளக்கம் அளித்து இருக்கிறோம். ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தொடர்பாக அனைத்து விதமான பதில்களையும் ஆளுநரிடம் தமிழ்நாடு அரசு அளித்துள்ளது. ஆனால் ஒப்புதல் தாமதப்படுத்தியதற்கான காரணம் ஆளுநருக்குத்தான் தெரியும். ஆன்லைன் ரம்மி அவசர சட்டம் காலாவதி ஆகிவிட்டதால், ஏற்கனவே அமலில் உள்ள சட்டத்தின் அடிப்படையில் தான் இனி தமிழக அரசு இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க முடியும். ஆளுநர் ஒப்புதல் அளித்த உடன் சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்தை தமிழக அரசு அமல்படுத்த முடியும். அதற்கு நாங்களும் தயாராக உள்ளோம். ஆளுநர் கையெழுத்து போட்டு விட்டால் இதற்கு உயிர் வந்துவிடும். தற்போது உள்ள சூழ்நிலையில் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லக்கூடிய சூழ்நிலையில் இல்லை. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகு அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லலாம். இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.