கல்லூரி மாணவனை பேராசிரியர் ஒருவர் தீவிரவாதி என அழைக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
இஸ்லாமிய வெறுப்பின் உச்சமாக கல்லூரி மாணவனை பேராசியர் ஒருவர் தீவிரவாதி என அழைக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைராலாகி வருகிறது. பாஜக ஆளும் கர்நாடகாவில் உள்ள ஒரு பல்கலைக்கழக வகுப்பறையில் எடுக்கப்பட்ட அந்த வீடியோவில், பேராசிரியரிடம் ஒரு மாணவர் ஆவேசமாக பேசுவது பதிவாகியுள்ளது. அந்த பேராசிரியர், வகுப்பில் இருந்த அந்த குறிப்பிட்ட மாணவனிடம் கேள்விகேட்க அந்த மாணவனின் பெயரை கேட்டுள்ளார். இஸ்லாமிய மாணவரான அவர் தனது பெயரை கூறியுள்ளார். உடனே, “ஓ.. நீ கசாபா? (மும்பை தாக்குதல் சம்பவத்தில் தண்டனை பெற்றவர்) என்று கூறியுள்ளார். அதாவது ‘பயங்கரவாதி’ என்ற பொருளில் அந்த மாணவனை அழைத்துள்ளார். இதனால், வெகுண்டெழுந்த அந்த மாணவன், “நீங்கள் எப்படி என்னை அப்படி சொல்லி அழைக்காலம்” என கேட்கிறார்.
அதற்கு பேராசிரியர், “நீ என் மகன் போன்றவன். விளையாட்டுக்காக அப்படி சொன்னேன்” என்றார். அதற்கு அந்த மாணவன், “மும்பை தாக்குதல் சம்பவம் விளையாட்டான காரியம் இல்லை. இந்த நாட்டில் இஸ்லாமியனாக இருப்பதும், இதுபோன்ற பிரச்சனைகளை சந்திப்பதும் விளையாட்டு இல்லை. உங்கள் மகனை அப்படி அழைப்பீர்களா. மாட்டீர்கள் தானே, அப்போது ஏன் என்னை மட்டும் அழைக்கிறீர்கள்?. அதுவும் வகுப்பறையில் அனைவரின் முன்னிலையில் எப்படி அவ்வாறு அழைப்பீர்கள். நீங்கள் போராசிரியர், பாடம் எடுக்கும் இடத்தில் இருக்குறீர்கள்” என அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுத்தார்.
அந்த பேராசிரியர் தொடர்ந்து, மன்னிப்பு கேட்டாலும், அதற்கு அந்த மாணவர், “மன்னிப்பு கேட்பது என்பது இந்த சீர்க்கேட்டை எந்த வகையில் இதை சரிசெய்யாது” என்று உரக்க கூறினார். இத்துடன் 45 விநாடி வீடியோ நிறைவடைகிறது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அந்த பேராசிரியரை இடை நீக்கம் செய்துள்ளது.