பிரதமர் நரேந்திர மோடியை ராவணனுடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஒப்பிட்டு பேசி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
182 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநிலத்திற்கு, வரும் 1 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தலும், 5 ஆம் தேதி, இரண்டாம் கட்டத் தேர்தலும் நடைபெற உள்ளது. இரண்டு கட்டத் தேர்தலிலும் பதிவாகும் வாக்குகள், டிசம்பர் மாதம் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரது சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தில், கடந்த 24 ஆண்டுகளாக, பாஜக ஆட்சியில் உள்ளது. இந்த முறை எப்படியாவது பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்த தூக்கி எறிய வேண்டும் என்ற முனைப்பில், காங்கிரஸ் – ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தேர்தல் பணியாற்றி வருகின்றன.
முதற்கட்ட வாக்குப்பதிவுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடையும் நிலையில், பாஜக – காங்கிரஸ் – ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், குஜராத் மாநில தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது. இந்நிலையில் இன்று, அகமதாபாத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன பேசியதாவது:-
மாநகராட்சி தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோடியின் முகத்தை தான் பார்க்கிறோம். எம்எல்ஏ தேர்தலாக இருந்தாலும், எம்பி தேர்தலாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் மோடியின் முகம் தான் உள்ளது. ராவணன் போல், உங்களுக்கு 100 தலைகள் உள்ளதா?
சட்டசபை, மாநகராட்சி, நகராட்சி தேர்தல் என அனைத்திலும் மோடியின் பெயரில் ஓட்டு கேட்கப்படுவதை நான் பார்க்கிறேன். வேட்பாளர்கள் பெயரில் ஓட்டு கேளுங்கள். நகராட்சியில், மோடி வந்து உங்களுக்கு பணி செய்ய போகிறாரா? உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் அவர் வருவாரா? இவ்வாறு அவர் பேசினார்.
பிரதமர் நரேந்திர மோடியை, ராவணனுடன் ஒப்பிட்டு பேசியதற்கு, மல்லிகார்ஜூன கார்கேவுக்கு, பாஜக கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இது குறித்து பாஜக நிர்வாகி அமித் மால்வியா கூறியதாவது:-
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள முடியாமல் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது வார்த்தைகளில் கட்டுப்பாட்டை இழந்து, பிரதமர் நரேந்திர மோடியை ராவணன் என அழைத்துள்ளார். குஜராத் மண்ணின் மைந்தனை தொடர்ந்து அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது. குஜராத் மற்றும் குஜராத் மைந்தனை அக்கட்சி அவமதித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.