உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியை சந்தித்த டிஸ்கவரி சேனல் பியர் கிரில்ஸ்!

உக்ரைன் அதிபர் செலென்ஸ்கியை பிரிட்டனின் பிரபல தனியார் தொலைக்காட்சியின் நெறியாளர் பியர் கிரில்ஸ் நேரில் சந்தித்துப் பேசினார்.

இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிபர் செலென்ஸ்கியுடன் இருக்கும் படங்களை பியர் கிரில்ஸ் பகிர்ந்துள்ளார். அதில் பியர் கிரில்ஸ் கூறியுள்ளள்ளதாவது:-

இந்தவாரம் உக்ரைன் தலைநகருக்குச் சென்று அந்நாட்டு அதிபர் செலென்ஸ்கியை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அனுபவம் என்னைப்போன்ற வேறு யாருக்கும் கிடைக்காது. உக்ரைன் நாடு குளிரில் தவிக்கிறது. அடிப்படை கட்டமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் வாழ்வதற்காக போராடி வருவது அன்றாடம் நடந்துவரும் ஓர் உண்மையான போராட்டம். இந்த சிறப்பு நிகழ்ச்சி மூலம் இந்த உலகம் பார்க்காத அதிபர் செலென்ஸ்கியின் இன்னொரு பக்கம் புலப்படும். நான் என்ன அறிய வேண்டும் என்றால், எப்படி நாட்டைக் காக்கிறீர்கள்.. எனக்கு பதில்களாக நிறைய கிடைத்தன. இந்த நிகழ்ச்சி விரைவில் வெளியாகவுள்ளது. இந்த இக்கட்டான சூழலிலும் எங்களை அரவணைத்து நேரம் ஒதுக்கியமைக்கு அதிபர் செலென்ஸ்கிக்கு நன்றி. உறுதியுடன் இருங்கள் என்று நம்பிக்கையுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவுக்கு உலகம் முழுக்கவுள்ள பியர் கிரில்ஸ் ரசிகர்கள் பகிர்ந்து தனது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். தாக்குதலுக்கு உள்ளாகும் உக்ரைன் நாடு குறித்து முழுமையாக அறிந்துகொள்ள வேண்டும் என்றும், உக்ரைன் அதிபர் எடுக்கும் முயற்சிகள், மக்கள் அனுபவிக்கும் சிரமங்கள், உள்ளிட்டவை குறித்து வெளி உலகத்திற்கு தெரிவிக்க இந்த நிகழ்ச்சி உதவியாக இருக்கும் என்றும் பலர் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.