தாய்லாந்து போர் கப்பல் நடுக்கடலில் மூழ்கியது : 75 பேர் மீட்பு!

தாய்லாந்து நாட்டின் போர் கப்பல் நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது தீவிர புயல் காற்று விசியுள்ளது. போர் கப்பலில் இருந்த 75 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் கடற்படைக்கு சொந்தமான போர் கப்பல் நேற்று நள்ளிரவு தாய்லாந்து வளைகுடா பகுதியில் உள்ள கடற்பகுதியில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அந்த போர் கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 106 பேர் பயணித்துள்ளனர். அப்போது, கடலில் திடீரென புயல் காற்று வீசியதால் கடல் சீற்றமும் ஏற்பட்டுள்ளது. இதனால், போர் கப்பலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், கப்பலுக்குள் கடல் நீர் புகுந்துள்ளது. மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கப்பலில் புகுந்த கடல்நீரை வெளியேற்ற வீரர்கள் முயற்சித்தும் முடியவில்லை. கடல் நீர் அதிக அளவில் புகுந்ததால் நடுக்கடலில் கப்பல் மூழ்கத்தொடங்கியது.

போர் கப்பலில் இருந்த வீரர்கள் உள்பட அனைவரும் கடலுக்குள் விழுந்தனர். இது குறித்து தகவலறிந்த கடற்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இந்த மீட்புப்பணியின் போது போர் கப்பலில் இருந்த 75 பேர் மீட்கப்பட்டுள்ளனர். ஆனாலும், கடலில் மூழ்கிய 31 வீரர்கள் மாயமாகினர். இதையடுத்து, மாயமான வீரர்களை தேடும் பணியை மீட்புக்குழுவினர் துரிதப்படுத்தியுள்ளனர்.