பிரிட்டனுக்கு அடைக்கலம் தேடி வரும் அகதிகளை ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்கும் அரசின் திட்டம் சட்டபூா்வமானதுதான் என்று அந்த நாட்டு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.
இது குறித்து உயா் நீதிமன்ற நீதிபதி கிளைவ் லெவிஸ் அளித்துள்ள தீா்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
பிரிட்டனுக்கு வரும் அகதிகளில் சிலரை ருவாண்டாவுக்கு அனுப்புவதற்கான அரசின் திட்டத்தில் எந்த சட்டமீறலும் இல்லை. அந்த திட்டம் அகதிகளின் அடிப்படை உரிமைகள் தொடா்பான சா்வதேச ஒப்பந்தத்துக்கு உள்பட்டதே ஆகும். எனினும், ருவாண்டாவுக்கு அனுப்பப்படும் அகதிகளைத் தோ்ந்தெடுக்கும்போது, ஒவ்வொரு தனிப்பட்ட அகதியின் சூழலையும் உள்துறை அமெச்சா் சுவெல்லா பிரேவா்மன் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போா் மற்றும் வறுமையால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து பிரிட்டனில் அடைக்கலம் தேடி வரும் அகதிகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அவா்களில் சிலரை ருவாண்டாவுக்கு அனுப்பிவைக்க முன்னாள் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ஆட்சிக் காலத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்கு, அப்போது நிதியமைச்சராக இருந்த தற்போதைய பிரதமா் ரிஷி சுனக் ஆதரவு தெரிவித்தாா்.
இந்த நிலையில், புதிய திட்டத்தின் கீழ் முதல்முறையாக 8 அகதிகளை விமானம் மூலம் ருவாண்டாவுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கில்தான் தற்போது நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியுள்ளது.