ரஷ்யா- உக்ரைன் போரை நிறுத்த முயன்றேன். மோதலை உருவாக்கி மேற்கத்திய நாட்டில் போரை உருவாக்குவது பெலாரசின் திட்டமில்ல என்று அவர் கூறினார்.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி 24-ம் தேதி போர் தொடங்கி 71-வது நாளாக நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யா உக்ரைன் மீது பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸும் செயல்பட்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் போரை தான் ஆதரிக்கவில்லை என பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ தெரிவித்துள்ளார். இந்த போர் குறித்து பேசிய அவர் கூறியதாவது:-
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் இவ்வளது நாட்கள் நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த போரை நிறுத்த நான் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டேன். எந்தவித போரையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. உக்ரைன் ரஷ்யா இடையே பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. நல்ல முடிவு எட்டப்படும் என நம்புகிறேன்.
சமீபத்தில் பெலாரஸ் மேற்கொண்ட ராணுவ பயற்சி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. நாங்கள் யாரையும் அச்சுறுத்தவில்லை. யாரையும் அச்சுறுத்தப்போவதில்லை. யாரையும் அச்சுறுத்தமாட்டோம். அதேவேளை, நாங்கள் அச்சுறுத்தப்படக்கூடாது. எங்களை எதிர்ப்பது யார் என்று எங்களுக்கு தெரியும். மோதலை உருவாக்கி மேற்கத்திய நாட்டில் போரை உருவாக்குவது பெலாரசின் திட்டமில்ல. ஆகையால், மேற்கத்திய நாடுகள் நிம்மதியாக உறங்கலாம். இவ்வாறு அலக்சாண்டர் கூறினார்.
இந்நிலையில் மரியுபோல் நகரத்தின் மீதான ரஷ்யா தாக்குதல்களை நிறுத்த வேண்டும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். மரியுபோலில் உள்ள பொதுமக்களை வெளியேற்றும்பொருட்டு ரஷ்யா போர் நிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என கூறியுள்ளார். ஐநாவும், செஞ்சிலுவை அமைப்பும் சேர்ந்து 100க்கும் மேற்பட்ட உக்ரைன் மக்களை மரியுபோலில் இருந்து வெளியேற்றியுள்ளதாகவும் கூறியுள்ளார்.
