சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் மீண்டும் 3 பெண்கள் பலி!

ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வழங்கப்பட்ட இலவச புடவையை வாங்கச் சென்ற 3 பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்டு, 3 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்களுக்கு முன்னர் தான் இதுபோன்ற கோர நிகழ்வு நடைபெற்று 8 பேர் பலியான நிலையில் தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சந்திரபாபு நாயுடு சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டு, ஏழை பெண்களுக்கு கைத்தறி சேலைகளை வழங்கினார். இந்த விழாவில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். சந்திரபாபு நாயுடு சிலருக்கு சேலைகளை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். பின்னர் அங்கு சேலை வாங்குவதில் பெண்களிடையே போட்டி நிலவியதால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஏராளமான பெண்கள் முண்டியடித்துக் கொண்டு மேடையை நோக்கி சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். இதில் கால்களில் மிதிபட்டு 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்த மேலும் சில பெண்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 3 நாட்களுக்கு முன் இதேபோல் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி சந்திரபாபு நாயுடு பங்கேற்ற கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.