காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் ஒரு குழந்தை இறந்தது. குண்டு வெடிப்பு நடந்த வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் இருந்து வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள்.
காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் டங்ரி கிராமத்தில் நேற்று பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தியதில் 4 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து அந்த கிராமத்தை முற்றுகையிட்டு பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். வேறு பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா? என்று சோதனை நடத்தப்பட்டது. பரபரப்பு நிலவிய அந்த கிராமத்தில் பாதுகாப்பு படையினர் நடவடிக்கையை ஏராளமானோர் திரண்டு நின்று பார்த்தனர். அந்த சமயத்தில் ஒரு வீட்டில் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதைத் தொடர்ந்து அலறல் சத்தம் எழுந்தது. அந்த வீட்டில் இருந்து படுகாயங்களுடன் 5 பேர் மீட்கப்பட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஒரு குழந்தை பலியானது. காயம் அடைந்தவர்களில் மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார். இதற்கிைடயே குண்டு வெடிப்பு நடந்த வீட்டுக்கு அருகே மற்றொரு வீட்டில் இருந்து வெடிக்காத சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை பாதுகாப்பு படையினர் கண்டுபிடித்து கைப்பற்றினார்கள். தொடர்ந்துஅந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.