ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை வேண்டும்: முத்தரசன்

கோவை ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

கோவை மாவட்டத்தில் நவீன சாமியார் ஜக்கி வாசுதேவ் நிர்வாகத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மர்ம சாவுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தற்போது அவிநாசி பகுதியைச் சேர்ந்த பழனிக்குமார் மனைவி சுபஸ்ரீ மரணச் செய்தி வெளியாகியுள்ளது. ஈஷா யோகா மையம் உச்சமட்ட அதிகார மையத்தின் செல்வாக்கு எல்லைக்குள் அழுத்தம் கொடுக்கும் பெரும் “சக்தி” பெற்றிருப்பதால் அத்துமீறல்களும், மர்மச் சாவுகளும் தொடர்வதாக ஆழ்ந்த சந்தேகம் வலுவாக எழுந்துள்ளது. இது போன்ற சம்பவங்களுக்கு தமிழ்நாடு அரசின் காவல்துறை மௌன சாட்சியாக இருந்து கடந்து போகக் கூடாது.

ஈஷா யோக மையத்தில் பயிற்சிக்காக கடந்த 11.12.2022 ம் தேதி உள்ளே சென்ற சுபஸ்ரீ 18.12.2022 ம் தேதி வீடு திரும்ப வேண்டும். அன்று காலை 7 மணிக்கு மனைவியை அழைத்து வரச் சென்ற அவரது கணவர் பழனிகுமார் 11 மணி வரை காத்திருந்த பின்னர், அவர் காலையிலேயே சென்று விட்டதாக மையத்தினர் சொன்னது ஏன்? மனைவி காணவில்லை என ஆலாந்துறை காவல் நிலையத்தில் பழனிக்குமார் கொடுத்த புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? அதில் கிடைத்த விபரங்கள் என்ன? ஈஷா யோக மையத்தின் வாகனம் மூலம் சுபஸ்ரீ இருட்டுப்பள்ளம் பகுதிக்கு கடத்தப்பட்டது ஏன்? சுபஸ்ரீ, வாடகை வாகனத்தில் இருந்து பதற்றத்துடன் பதறியடித்து தப்பி ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இது எப்போது, ஏன் நிகழ்ந்தது? நேற்று 01.01.2023 சுபஸ்ரீ கிணற்றில் பிணமாக மிதந்த அதிர்ச்சி செய்தியை தொடர்ந்து எடுத்த நடவடிக்கைகள் என்ன? அரசு மருத்துவமனையில் இரவோடு, இரவாக உடற்கூறாய்வு முடித்து, மின் மயானத்தில் தகனம் செய்தது ஏன்? மனைவி காணாமல் போனது குறித்து புகார் கொடுத்துள்ள சுபஸ்ரீயின் குடும்பத்தினர், அவரது இறுதி காரியங்களை விருப்பபூர்வமாக செய்தார்களா? என்பது போன்ற ஏராளமான கேள்விகள் எழுகின்றன.

ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்மச்சாவுகள், காணமல் போவோர் குறித்த புகார்கள், நில ஆக்கிரமிப்பு குறித்த முறையீடுகள் என எல்லாக் கோணங்களையும் விரிவாக விசாரித்து, குற்றச் செயல்கள் தடுக்கப்பட வேண்டும். ஈஷா யோகா மையம் தொடர்பாக எழுந்துள்ள புகார்கள் மீது வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. இதற்கான முறையில் நேர்மையும், சமூக அக்கறையும், நம்பகத்தன்மையும் கொண்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை நடத்தவும் சுபஸ்ரீயின் மரணத்திற்கு காரணமான உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்திட வேண்டும். இவ்வாறு முத்தரசன் கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தமிழக அரசு உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஎம் கட்சியை சேர்ந்த கோவை மக்களவை தொகுதி எம்.பி பி.ஆர்.நடராஜன் கூறியதாவது:-

சுபஸ்ரீயை 18ஆம் தேதியில் இருந்து காணவில்லை. சிசிடிவி காட்சிகளை பார்க்கும் போது யோகா உடையுடன் வெளியே ஓடுவது தெரியவருகிறது. ஒருவார காலமாக பயிற்சியில் இருந்தவருக்கு கடைசி நாளில் என்ன பிரச்சினை? நேற்றைய தினம் சடலமாக கிணற்றில் இருந்து மீட்கப்பட்டார். அவரது உடல் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு சுபஸ்ரீயின் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது குடும்ப வழக்கத்திற்கு மாறாக எரியூட்டப்பட்டிருக்கிறது. இது கோவை மாவட்ட மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈஷாவில் இப்படிப்பட்ட மர்ம மரணங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

அந்த பெண்ணை துரத்தியது யார்? அந்த பெண் ஓட வேண்டிய அவசியம் என்ன? எனவே ஈஷாவை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். சுபஸ்ரீவின் மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். இத்தகைய நிகழ்வு தொடர்வதை கோவை மக்கள் பீதியுடன் பார்த்து கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் ஈஷா யோகா மையத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை புரிந்து தங்கினார். தொடர்ந்து மத்திய அமைச்சர்கள், தேசிய தலைவர்கள் என பலரும் வருகை புரிவதால் தங்களை கேள்வி கேட்க முடியாது. ஒன்றும் செய்துவிட முடியாது என்று நினைக்கின்றனர். எனவே மாநில அரசும், முதல்வர் மு.க.ஸ்டாலினும் தலையிட்டு ஒரு விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும்.

கோவை ஈஷாவில் தமிழகத்தின் சட்ட திட்டங்களை மதிக்கிறார்களா? இந்திய நாட்டின் சட்ட திட்டங்களை மதிக்கிறார்களா? லட்சக்கணக்கான ஏக்கரில் கட்டிடங்களை கட்டி வைத்துள்ளனர். இதை பற்றி மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அவர்கள், நீதிமன்றத்தில் வந்து சொல்கிறார். அவர்கள் கல்விக் கூடங்களாக கட்டியுள்ளனர். எனவே அனுமதி வாங்கி கட்ட வேண்டிய அவசியம் இல்லை என அரசே ஆதரவாக பதில் அளிக்கின்றனர். இதன்மூலம் எவ்வளவு தூரத்திற்கு அவர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர் எனத் தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.